சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது எதற்காக? என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி
பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி. பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். ”பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்காக வெஸ்டன் டாய்லெட், ஏ.சி மற்றும் வெளியிலிருந்து உணவு முதலியன தரப்பட்டன என ஊடகங்களில் தகவல்கள் வந்தன.
ஆனால், இதையெல்லாம் மறுத்து அறிக்கைவிட்டார் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. அதனால் என்னைப் போன்ற வெகுஜன மக்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்று புரிந்துகொள்ள முடியாததால், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து கேள்விகள் கேட்டிருந்தேன். அதற்கு, கடந்த வாரம் கர்நாடக சிறைத் துறை பதில்கள் அனுப்பியது.
1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த தேதி, நேரம் என்ன?
பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.
2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?
பதில்: தண்டனைக் கைதியாக ஜெயலலிதா உள்ளே வந்ததில் இருந்து வெளியே சென்றதுவரை சிறைத் துறை அவருக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கவில்லை.
3. ஜெயிலுக்குள் இருந்தபோது ஜெயலலிதா எத்தனை நபர்களைச் சந்தித்தார்? அவர்களின் பதவிகள் என்ன? அவர்கள் உறவினர்களா? வழக்கறிஞர்களா? நலம் விரும்பிகளா? அதிகாரிகளா? மந்திரிமார்களா? என்பதைத் தெளிவாகக் கொடுக்க வேண்டும்?
பதில்: அவரை யாரும் சந்திக்கவில்லை.
4. ஜெயலலிதா சிறைக்குள் எந்தெந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் இருந்தார்?
பதில்: ஜெயலலிதா பெண் தண்டனைக் கைதி என்பதால் பெண்களுக்கான ப்ளாக்கில் அடைக்கப்பட்டார். அவரை பெண் எஸ்.பி., பெண் ஜெயிலர், பெண் பாதுகாப்பு அதிகாரி, பெண் தலைமை வார்டன் மற்றும் சிறைத் துறை இயக்குநர் மேற்பார்வையில் இருந்தார்.
5. தண்டனைக் கைதிகளுக்குச் சீருடை கொடுக்கப்பட வேண்டியது சிறைத் துறை விதி. அப்படிச் சீருடை கொடுக்கப்படவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன?
பதில்: கர்நாடக சிறைத் துறை 350 விதிப்படி ஒரு தண்டனைக் கைதிக்குச் சீருடை களும், படுக்கை விரிப்புகளும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், சாதாரண தண்டனைக் கைதிகள் இந்தச் சீருடைகளை அணியத் தேவையில்லை. ஆனால், கொடூரமான தண்டனைக் கைதிகள் கட்டாயம் இந்தச் சீருடைகளைத்தான் அணிய வேண்டும். ஜெயலலிதா சாதாரண தண்டனைக் கைதி என்பதால், அவர் வெள்ளைச் சீருடை அணியவில்லை எனத் தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால், சிறைத் துறை அதிகாரியே பத்திரிகைகள் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அதேபோல உணவும் வெளியிலிருந்து போனதை போட்டோவோடு பத்திரிகைகளில் வெளி வந்ததே. அது தவறான படங்களா?
ஒரு தண்டனைக் கைதிக்கு நம்பரும், சீருடையும் வழங்கப்பட வேண்டும். அதைக்கூட அணியாவிட்டால், இந்த தண்டனைக்கு என்ன அர்த்தம்?
எந்த அடிப்படையில் கைதிகள் தரம் பிரிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அதே பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்த 132 பெண் கைதிகளுக்கும் சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. அதையணிந்த அந்த 132 பெண் சிறைக் கைதிகளும் கொடூரக் கைதிகளா? என்பதை சிறைத் துறை விளக்க வேண்டும். மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல்முறையீடு செய்வேன். சொல்வதைப்போல தண்டனைக் கைதிகளுக்கும் பாகுபாடு இருக்கிறது என்றால், அதனை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்பேன்என்றார்.
கர்நாடக சிறைத்துறை அதிகாரி டி.ஐ.ஜி ஜெயசிம்ஹாவிடம் பேசினோம். ஜெயலலிதா யூனிஃபார்ம் அணியாததைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நாங்கள் ஃபாலோஅப் பண்ணமுடியும். நாங்களாக எதையும் செய்ய முடியாது. ஜெயலலிதா கர்நாடக சிறைத் துறை விதிகளுக்கு உட்பட்டு உள்ளே கொடுக்கப்பட்ட உணவுகளைத்தான் சாப்பிட்டார். வெளியில் இருந்து உணவுகள் வரவழைக்கப்படவில்லை. சாதாரண தண்டனைக் கைதிகள் சீருடை அணியத்தேவையில்லை. அவர்களிடம் துணிகள் இல்லாதபோது நாங்கள் கொடுக்கும் சீருடையை அணிந்து கொள்கிறார்கள் என்றார்.