முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று 136 அடியை தாண்டியது. 35 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணையில் இருந்து பெறப்படும் நீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பாக தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த அணை 100 ஆண்டுகள் பழமையானது என்றும், எனவே அதில் கூடுதலாக நீரைத்தேக்க முடியாது என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக கடந்த 1979–ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அதற்காக அணையில் உள்ள மதகுகள் மேலே ஏற்றப்பட்டன. அதன் பின்னர் கடந்த 2006, 2007 மற்றும் 2011–ம் ஆண்டுகளில் பெய்த மழை காரணமாக அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் கேரள அரசு அணையினை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, அதற்கு மேல் நீர்மட்டம் உயராத வகையில் கூடுதலாக வந்த தண்ணீரை வீணாக வெளியேற்றியது. இதற்கிடையே அணை பலமாக இருப்பதாகவும் அதனால், கூடுதல் தண்ணீரை தேக்குவதற்கு உத்தரவிடக்கோரியும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 7–ந் தேதி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் 3 பேர் அடங்கிய கண்காணிப்பு குழுவினை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவினர் அணையை ஆய்வு செய்தனர். அப்போது அணைக்கு தண்ணீர் வரும் நிலையில் அதன் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில் 13 மதகுகளும் இறக்கி வைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 135.80 அடியாக உயர்ந்தது. பின்னர் மாலையிலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால், அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக உயர்ந்தது. தற்போது 142 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், 35 ஆண்டுகளுக்கு பிறகு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. தற்போது அணைக்கு 1,916 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 456 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 6 ஆயிரத்து 66 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. நேற்று மாலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து காணப்பட்டது. அணையில் 136 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பது தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இங்குஅழுத்தவும்மற்றைய செய்திகள்
0 கருத்துகள்:
Post a Comment