Search This Blog n

22 November 2014

கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்!


காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு, அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக, 650 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், இதில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும் விவசாயிகள் சங்கத்தினர் கூறியிருந்தனர். மேலும், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய இடங்களில் ரயில் மறியல் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு வர்த்தகர் சங்கங்களும், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது. விவசாயிகளுக்கு ஆதரவாக வனிகர்களும் தங்களது கடைகளை அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பேருந்துகள் ஓடாமல் ஒருசில அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டனர். முழு அடைப்புப் போராட்டம் நடந்து வரும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மழையை பொருட்படுத்தாமல் ஆங்காங்கே விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை சுற்றுவட்டார கிராமங்களில் கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார்குடி சுற்றுவட்டாரத்திலும் மழையை பொருட்படுத்தாமல், பெருகவாழ்ந்தான், மணலி, விளக்குடி உட்பட 10 கிராமங்களில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பரவாக்கோட்டை, கோட்டூரிலும் அரசு, தனியார் வாகனங்களை மறித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment