இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு அப்பாவி இளைஞர்கள் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 7 இராணுவ வீரர்களுக்கு இந்திய இராணுவ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 3 அப்பாவி இளைஞர்களை சுட்டுக் கொன்றிருந்த இராணுவ வீரர்கள், இந்தப் படுகொலையை மறைப்பதற்காக இளைஞர்களின் சடலங்கள் மீது கறுப்பு பெயின்ட்டை ஊற்றி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போட்டிருந்ததுடன், வெளிநாட்டிலிருந்து ஊடுருவ முயன்ற பங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிக்கையொன்றையும் தயாரித்து கையளித்திருந்தனர்.
எனினும் ராஃபியாபாதில் காணாமல் போன ஷேஷாத் அகமத், ரியாஸ் அகமத், முகமத் ஷபி ஆகிய 3 இளைஞர்களே இராணுவ வீரகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்திருந்தது.
இதனை அடுத்து இறந்த இளைஞர்களின் உறவினர்களின் கோரிக்கையை அடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படட்ட 11 ராணுவ வீரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
2010-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்திய இராணுவத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது சி.ஆர்.பி.எப். மற்றும் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 120 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிடனர்.
இதனால் இந்த சம்பவம் தேசிய அளவில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீதான இறுதி விசாரணையின் முடிவில் இன்று தீர்ப்பை அறித்துள்ள இந்திய இராணுவ நீதிமன்றம், படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஏழு இராணுவ வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தண்டனை வழங்கப்பட்டுள்ள 7 இராணுவ வீரர்களில் இருவர் உயர் இராணுவ அதிகாரிகள் என்றும், இந்த இராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடந்த இந்த துயர சம்பவத்துக்கு காலம் கடந்த பின்னர் வரவேற்கத்தக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் , “காஷ்மீரில் உள்ள யாரும் நம்ப முடியாத ஒன்று நடந்துள்ளது. இது போன்ற வழக்குகளில் மிகவும் அரிதாக நீதி கிடைக்கின்றது.
மச்சில் சம்பவம் போலான போலி என்கவுண்டர் இனி நடக்கக் கூடாது. இந்த தீர்ப்பு இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு பாடமாக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment