பாஜ மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்க, டிஜிபிக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:: தமிழக பாஜ பொது செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ், சேலத்தில் கடந்த 19ம் தேதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
அரசியல் காரணங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ நடைபெறும் வன்முறை மற்றும் வன்முறை குற்றங்களுக்கு நாகரீக சமுதாயத்தில் இடமில்லை. இந்த குற்றங்கள் உறுதியான, வலுவான நடவடிக்கைகளால் வேரறுக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் எனது தலைமையிலான அரசு உயர் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை பாதுகாக்க, சட்ட விரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கைகளை தமிழக காவல் துறை எடுத்து வருகிறது.
சட்டத்தை நிலைநாட்ட, சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும் செயல்படுவதற்கு ஏதுவாக எவ்வித குறுக்கீடுகளும் இல்லாத சூழ்நிலை காவல்துறையினருக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் இருப்பிடமாக திகழ்கிறது. இனவாத, இடது சாரி தீவிரவாதம், மத அடிப்படைவாத வன்முறைÂ மோதல்கள் ஏதுமின்றி தமிழகம் திகழ்கிறது.
 சமூக விரோத சக்திகள், தனிப்பட்ட மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்படும் கொலைகள், இன மோதல்கள் அல்லது தீவிரவாதத்தை எந்த வகையிலாவது தூண்டிவிடுதல், மாநிலத்தின் அமைதி நிலைமையை சீர்குலைக்கும் சக்திகள் அல்லது சமூக விரோத சக்திகளை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றங்களையும் கண்டறிந்து உறுதியான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எப்போதும் மேற்கொண்டு வருகிறது. மத வன்முறை தொடர்பான சம்பவங்களை கையாளுவதற்காக சிறப்பு புலனாய்வு பிரிவு தமிழக காவல்துறையில் ஏற்கனவே உள்ளது. பாஜக மூத்த தலைவர் அத்வானியை குறிவைத்து, திருமங்கலத்தில் கடந்த 2011ம் ஆண்டு வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்தது, இந்த சிறப்பு புலனாய்வு பிரிவு சமீபத்தில் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வேலூரில் கடந்த 1ம் தேதி இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணையையும் மேற்கொள்ளும்.
இந்த கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை மிக விரைவில் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஏதுவாக, இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு காவல்துறையினர் உள்ளிட்ட தேவைப்படும் அனைத்து உதவிகளையும், தமிழக குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு காவல்துறை (சிபிசிஐடி) தலைமை இயக்குனர் வழங்குவார்.
தமிழக காவல்துறையின் திறமைகளை அனைவரும் அறிவர். ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோரை கொடூரமாக கொலை செய்தவர்களை தமிழக காவல்துறையினர், விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்