நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீதப் பங்குகளை விற்கும் முடிவினை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியகாந்திக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீதப் பங்குகளை விற்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடங்கிய 22 தொழிற்சங்கங்களும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது, ஜூன் 22-ஆம் தேதி நெய்வேலி பங்குகளில் 10 சதவீதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் தங்களுக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தேன்.
அப்போதும் அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிலாளர்களும் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். வேலை நிறுத்தமும் நடைபெற்றது. இதன் பின் நிலைமை கடுமையான பிறகு 10 சதவீத பங்குகள் விற்கும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
2006-ஆம் ஆண்டு தங்களிடம் கேட்டுக் கொண்டவாறே இப்போது மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். 25 ஆயிரம் தொழிலாளர்கள் தொடர்புடைய பிரச்னை என்பதாலும், அவர்கள் வேலை நிறுத்தம் நீடித்தால் மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும் என்பதாலும், தாங்கள் இதனைப் பரிசீலித்து பங்குகளை விற்கும் முடிவினை கைவிட ஆவன செய்ய வேண்டும் என்று கருணாநிதி கடிதத்தில் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தின் நகலை கருணாநிதி அனுப்பியுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment