ஆனால், மர்ம நபர்கள் அவரைக் கொலை செய்து, உடலை தருமபுரியில் ரயில் தண்டவாளம் அருகே போட்டுச் சென்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனது காதல் கணவரான இளவரசனுடன் இனி வாழ விரும்பவில்லை; தனது தாயுடனே வாழ்நாள் முழுவதும் உடனிருக்க விரும்புவதாக திவ்யா புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இளவரசன் மனமுடைந்து காணப்பட்டார். தனது துயரத்தை தனது தந்தையிடம் பகிர்ந்து கொண்டார்.
மேலும், தருமபுரியில் இருப்பதால் திவ்யாவின் நினைவே உள்ளது. எனவே ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள தனது நண்பர் தனக்கு வேலை பார்த்து வைத்துள்ளதாகவும், அங்கு செல்ல விரும்புவதாகவும் தனது தந்தை இளங்கோவிடம் இளவரசன் கூறினாராம்.
இந்த நிலையில், குடும்பச் செலவுக்காக தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து வியாழக்கிழமை ரூ.9,000-த்தை இளவரசன் எடுத்தார்.
இதற்கிடையே, தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, காலை 10 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால், நண்பகல் வரை அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளம் அருகே இளவரசன் சடலமாகக் கிடந்தார்.
அவரது சடலத்துக்கு அருகே அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்து. அங்கு மதுபாட்டில்கள், பை, பாதி தின்ற வாழைப்பழம் போன்றவை கிடந்தன.
ரயில் தண்டவாளம் அருகே சடலம் கிடப்பது குறித்து தண்டவாள மேற்பார்வையாளர் எஸ்.கெüடு, தருமபுரி ரயில் நிலைய அலுவலர் ஜெயபாலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் ரயில்வே போலீஸôருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, ரயில்வே போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
இதுகுறித்து இளவரசனின் தந்தைக்கு காவலர் பழனி தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து, இறந்து கிடப்பது தனது மகன் இளவரசன்தான் என்பதை உறுதி செய்தார்.
சம்பவ இடத்தில் இளவரசனின் உறவினர்கள் திரண்டனர். இளவரசனை மர்ம நபர்கள் கொலை செய்து அங்கு போட்டுள்ளதாகவும், சடலத்தை அந்த இடத்தில் இருந்து எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.
மேலும், அவரது சடலத்தை நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கர்க், பாதுகாப்புப் பணிக்கு திருப்பூருக்கு சென்றிருந்ததால் சம்பவ இடத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் விரைந்து வந்தார்.
சேலம் சரக டிஐஜி சஞ்சய் குமார், தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ராமர் உள்ளிட்ட அலுவலர்களும் சம்பவ இடத்துக்கு வந்து, இளவரசனின் உறவினர்களைச் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, இளவரசனின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ரயில் தாமதம்
இளவரசனின் சடலம் ரயில் தண்டவாளம் அருகே கிடந்தது பிற்பகல் 2 மணிக்கு தெரிய வந்தது. இதனால் கோவையிலிருந்து மகாராஷ்டிர மாநிலம், குர்லா செல்லும் கோவை லோக மானிய திலக் விரைவு ரயிலில் அவர் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இளவரசனின் சடலத்தை எடுக்க அவரது உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அங்கிருந்து சடலம் மாலை 5.40 மணியளவில் அகற்றப்பட்டது. இதனால் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில், சிவாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அந்த ரயில் அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
வன்முறையின் பின்னணி
தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் நத்தம்காலனி கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவை காதல் திருமணம் செய்தார்.
இதையறிந்த திவ்யாவின் தந்தை நாகராஜன் (53) கடந்த ஆண்டு, நவம்பர் 7ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதனால், திவ்யாவின் சமூகத்தினர் இளவரசனின் சொந்தக் கிராமமான நாயக்கன்கொட்டாய் நத்தம்காலனி மற்றும் கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்த வன்முறை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீஸôர் வழக்குப் பதிந்து 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட 90 பேரைக் கைது செய்தனர்.
தேசிய தலித் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக 500-க்கும் மேற்பட்டவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் கைது செய்தனர். இவர்களில் சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் தாய் தேன்மொழி ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வன்முறைக்குப் பிறகு, தனது கணவர் இளவரசனின் குடும்பத்துடன் வசித்து வந்த திவ்யா, சில மாதங்களுக்குப் பிறகு உடல் நலம் குன்றிய தனது தாயைப் பார்க்கச் சென்றார். ஆனால் அவர் மீண்டும் இளவரசனின் வீட்டுக்குத் திரும்பவில்லை
0 கருத்துகள்:
Post a Comment