Search This Blog n

22 July 2013

15 ஆயிரம் அழுகிய முட்டைகள் : ஊழியர் சஸ்பெண்டு


வேலூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் அருகேயுள்ள் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி உள்ளது . இப்பள்ளிக்கு சத்துணவு மையத்துக்கு முட்டைகள் நேற்று பிற்பகல் மினிவேனில் எடுத்து வந்து இறக்கப்பட்டன.
அப்போது பள்ளியிலிருந்து தனது மகனை அழைத்து வர மஸியூர் ரஹ்மான் என்பவர் சென்றுள்ளார். வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட முட்டைகளிலிருந்து தூர்நாற்றம் வீசியதால் அது குறித்து மினி வேனின் டிரைவரிடம் அவர் கேட்டுள்ளார்.
பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹபிபுல்லா ரூமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து சில முட்டைகளை சோதனை செய்து போது, அவை அழுகியிருந்ததும், புழுக்கள் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் ஆம்பூரில் இயங்கி வரும் ஹசனாத்–யே–ஜாரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஹசனாத்–யோ–ஜாரியா நிதியுதவி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கும் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக அஸ்லம்பாஷா எம்.எல்.ஏ. வேலூர் மாவட்ட கலெக்டர் சங்கரிடம் புகார் செய்தார். இதையடுத்து ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணன், ஆம்பூர் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முட்டைகளைச் சோதனையிட்டனர்.
இதில் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் முட்டைகள் அழுகி இருந்தது தெரியவந்தது.பள்ளிகளுக்கு முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் லாரிகளில் நேரடியாக முட்டைகளை கொண்டு சென்று விநியோகம் செய்வார். ஒன்றியங்களில் உள்ள ஒப்பந்ததாரர் முட்டைகளை வாகனங்களில் கொண்டு சென்று சத்துணவு மையங்களில் விநியோகம் செய்வார்.
இவ்வாறாக மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட 110 சத்துணவு மையங்களுக்கும், சுமார் 130 அங்கன்வாடி மையங்களுக்கும் சுமார் 3 லட்சத்துக்கும் மேலான முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாகவும் அப்படி விநியோகிக்கப்பட்ட முட்டைகளில் ஆயிரக்கணக்கானவை அழுகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சத்துணவு அமைப்பாளர்கள் சரிபார்த்து வாங்க வேண்டிய முட்டைகளை மாணவனின் தந்தை சோதனையிட்டதால், விபரீதம் தடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களுக்கு நேற்று விநியோகம் செய்யப்பட்ட 15 ஆயிரம் முட்டைகளையும் திரும்பப் பெற்று புதிய முட்டைகளை உடனடியாக விநியோகிக்குமாறு நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை நிறுவனத்துக்கு கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார்.
அத்துடன் அழுகிய முட்டைகளை பள்ளிகள், சத்துணவு மையங்களுக்கு விநியோகித்தமைக்காக அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
முட்டை விநியோகத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக மாதனூர் ஊராட்சி அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் பாலையா உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

Post a Comment