பீகார் மாநிலம் சாப்ரா அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று போலீசில் சரண் அடைந்தார்.
இந்த வழக்கில் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரையும் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மாணவர்கள் இறந்து ஒரு வாரத்திறகுப் பிறகு முதல்வர் நிதிஷ் குமார் இன்று இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாப்ரா பள்ளியில் நடந்த சம்பவத்தால் மிகுந்த கவலை அடைந்தேன். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அவர்களின் சிகிச்சைக்காக அனைத்து உதவிகளையும் செய்தோம். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தேன்.
காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் நான் நேரடியாக சாப்ராவிற்கு செல்ல முடியவில்லை.
மதிய உணவு திட்டம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து பெற்று கல்வி கற்பதை உறுதி செய்யும் சமூக நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
பீகாரில் மட்டும் செயல்படுத்தப்படவில்லை. இது தேசிய அளவிலான திட்டம். மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் கவனம் செலுத்துவோம்.
சாப்ரா பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாக தடயவியல் ஆய்வறிக்கை கூறுகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, பீகார் டி.ஜி.பி. தலைமையில் உயர்மட்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சதி ஏதேனும் நடந்துள்ளதாக என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த கிராமத்திற்கு இந்த குழுவினரை அனுமதிக்கவில்லை. அவர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. எனக்கு உள்ள பொறுப்புகளை நான் அறிவேன்.
கந்தமான் கிராமத்திற்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முடிவு செய்திருக்கிறோம்.
மதிய உணவு மரணம் தொடர்பாக ஏதாவது கூறி, விசாரணைக்கு இடையூறு செய்வதை நான் விரும்பவில்லை. கந்தமான் கிராம மக்கள் நினைப்பதற்கும், வெளியுலகம் நினைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
உண்மை விரைவில் வெளிவரும். மதிய உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் நிதி மற்றும் பணியாளர்கள் தேவை என அவர் கூறினார்
0 கருத்துகள்:
Post a Comment