முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்த தவறுகளுக்காக பதவி விலக வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 151 பேரில் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையானது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், பொது அமைதிக்கு தீங்கு விளைவித்ததாகவும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்த 16 பேரில் 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 15ம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால் ஜனநாயக ரீதியில், அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். வன்முறை மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்கமுடியாது என கூறியிருந்தார்.
அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் கூறிய முதலமைச்சர் அதை தாமும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாததுடன் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களையும், பொது அமைதிக்கு தீங்கு ஏற்படுத்தியவர்களையும் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார் ஜெயலலிதா.
இந்நிலையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் 5 அமைச்சர்களையும், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்வதுடன் அவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கி ஊக்குவித்ததற்காக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டும் என கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment