பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செயுதுள்ளதால், வருகிற அக்டோபர் மாதம் ரயில் கட்டணம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதோடு, டீசல் விலையும் மாதம் தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் பயணிகள், மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாய சூழலில் மத்திய அரசு உள்ளதாகவும் தெரிய வருகிறது.
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அருணேந்திர குமார், இது பற்றி கூறுகையில், "எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை சீரமைப்பது பற்றிய ஆய்வுக் கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் ரயில் கட்டண உயர்வு பற்றி முடிவு செய்யப்படும்." என்று கூறியுள்ளார். எனவே, வரும் அக்டோபர் மாதம் ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் தெரிய வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால் சாதாரண மக்களை அதிகமாக பாதிக்காத வகையில் ரயில் கட்டண உயர்வு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங், ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளார். அவரது பரிந்துரை பல்வேறு பிரிவினருக்கும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அந்த கூட்டத் தொடரில் ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் பற்றிய தகவல் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது. மற்ற அமைச்சர்களின் கருத்தை கேட்டபிறகு, ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிக்கை வரைவு திருத்தி அமைக்கப்படும் என்றும் தெரிகிறது.இந்த ஆணையம் செலவுக்கு ஏற்ப ரயில் பயணிகள் கட்டணம், மற்றும் சரக்கு கட்டணங்களின் விலையை மாற்றி அமைக்கும் என்றும் தெரிய வருகிறது. இதற்கிடையே ரயில் சேவையை நவீனமயமாக்கும் திட்டம் படு ஸ்லோவாக நடப்பது வேறு, பிரதமருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். மேலும் ரயில்வேயில் முதலீடு செய்வதை அதிகரிக்கும் திட்ட அறிக்கைகளைத் தயார் செய்யவும் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
அதோடு, ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் மிகவும் தீவிரம் காண்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலக குறிப்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment