சென்னை, ராயப்பேட்டை, "எக்ஸ்பிரஸ் அவென்யூ' வணிக வளாக கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து, சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமாக இருக்கலாம் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், சிந்துபூந்துறை, மேற்கு தெருவைச் சேர்ந்தவர், தெய்வநாயகம். கயத்தாறில் உள்ள, காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக உள்ளார். இவரது மகன் சண்முகம், 26; சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள, "காக்னிசன்ட்' நிறுவனத்தில், பொறியாளராக பணியாற்றி வந்தார். நேற்று பிற்பகல், 3:27 மணிக்கு, ராயப்பேட்டையில் உள்ள, "எக்ஸ்பிரஸ் அவென்யூ' மூன்றாவது தளத்தில் உள்ள சினிமா தியேட்டர் முன் வந்த சண்முகம், அங்கு, "எஸ்கலேட்டர்' அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இருந்து குதித்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்களை, "எக்ஸ்பிரஸ் அவென்யூ'வில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், அருகில் செல்லவிடாமல் தடுத்தனர். உதவ முயன்ற பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்தனர். பாதுகாவலர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்திருப்பதாக கூறி, 15 நிமிடம் வரை, காத்திருக்கச் செய்தனர்.
இதற்கிடையில், போலீசாரும் வந்துவிடவே, பொதுமக்களில் சிலர், சண்முகத்தை ஆட்டோவில் ஏற்றி, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சண்முகம் பரிதாபமாக இறந்தார். அண்ணா சாலை போலீசார் வழக்கு பதிந்து, சண்முகம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment