தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதின் கை பையை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாயாவதியின் கை பையில் இருந்த பர்சில் ரூ. 1 லட்சம் இருந்தது. இந்தப் பணத்துக்கு கணக்குக் கேட்டு அதிகாரிகள் கேள்வி கேட்டதையடுத்து பரபரப்பு மேலும் அதிகமானது.
கர்நாடகத்தில் வரும் மே 5ம் திகதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மாயாவதி நேற்று குல்பர்கா மாவட்டம் வந்தார். அங்குள்ள ஜேவர்கி நகரில் அமைக்கப்பட்ட ஹெலிபேட்டில் மாயாவதி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
ஹெலிகாப்டரை விட்டு மாயாவதி இறங்கியதும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் ஹெலிகாப்டரை தீவிரமாக சோதனையிட்டனர். பின்னர், மாயாவதியின் கையில் இருந்த கைப் பையை சோதனையிட்ட போது, உள்ளே ரூ.1 லட்சம் இருந்தது.
இந்தப் பணம் எதுக்கு வைத்துள்ளீர்கள், இவ்வளவு பணத்தை கொண்டு செல்லக் கூடாது என்று அவர்கள் கூறவே, இது என்னுடன் வந்துள்ள கட்சிக்காரர்களுக்கு சொந்தமான பணம். ஒரு நபர் ரூ.50,000 வரை பணம் வைத்திருக்க அனுமதி உள்ளது என்று மாயாவதி விளக்கியதையடுத்து அந்த அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.
இதனையடுத்து பிரசார மேடை அருகே மாயாவதி காரை விட்டு இறங்கியதும் அவரது காரையும் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதனால் மாயாவதி கடும் எரிச்சலடைந்தார். பின்னர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மாயாவதி என்னிடம் இன்று சோதனை நடத்தியது போல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கர்நாடகத்தில் பிரசாரத்திற்காக வந்தபோது பறக்கும் படையினர் ஏன் சோதனை நடத்தவில்லை?. நான் தலித் பெண் என்பதற்காக என்னிடம் மட்டும் சோதனை நடத்துகிறார்கள் என ஆவேசமாக பேசினார்.