பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 'கிங் பிஷர்' ஏர்லைன்ஸ்'-சில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொடர்ந்து 10 மாதங்களாக அந்நிறுவனம் சம்பளம் வழங்காததால் கடந்த ஆண்டில் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தம் செய்தனர்.
நிதி நெருக்கடியை காரணம் காட்டிய நிர்வாகம், ஊழியர்கள் வேலைக்கு திரும்பினால், சம்பள பாக்கியை தவணைகளாக தருவதாக கூறியது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஊழியர்கள், வேலைக்கு திரும்பாமல் தங்களது நிலையில் உறுதியாக இருந்தனர்.
ஏற்கனவே, கடன் சுமையால் சிக்கித் தவித்த கிங் பிஷர் நிறுவனத்திற்கு இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்தது. கடன் அளித்த வங்கிகள் ஒருபுறம் நெருக்கடி கொடுத்த நிலையில், இரண்டாவது பேரிடியாக அந்நிறுவனத்தின் விமான சேவை லைசென்சை மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரத்து செய்தது.
கடன் அளித்த தொகைக்காக விமானங்களை ஜப்தி செய்ய நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன. இதனை எதிர்த்து தடை உத்தரவு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் விஜ்ய் மல்லையா மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கிங் பிஷர் ஊழியர்கள் அனைவருக்கும் 2 மாத சம்பள பாக்கியை வங்கிகளில் அந்நிறுவனம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதை வைத்து பார்க்கையில், 'இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்தியாவில் எங்கு விளையாடினாலும் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்துவோம்' என்ற கிங் பிஷர் ஊழியர்கள் சென்ற மாதம் வெளியிட்ட அறிவிப்புக்கு கிடைத்த பலன் தான் இது என்றே கருதத் தோன்றுகிறது
0 கருத்துகள்:
Post a Comment