நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் முதல் முறையாக தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 2 பேருக்கு 1 ஆண்டு மற்றும் 1 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் ஏராளமான நில அபகரிப்பு வழக்குகள் புற்றீசல் போல் பெருக தொடங்கின. பொலிசாரும் வழக்குப் பதிவு செய்து பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டனர். பல வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதே போன்ற ஒரு வழக்குதான் தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்த சைலேந்தர் என்பவர் தொடுத்தார். சைலேந்தரும் அவரது தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவில் புகார் செய்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஆனந்த், பெருமாள் ஆகிய 2 பேருக்கும் 2 பிரிவுகளில் ஒரு ஆண்டு மற்றும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நடுவர் குணசேகரன் தீர்ப்பு அளித்தார்.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்கில் முதல் முறையாக 2 பேருக்கு தண்டனை கிடைத்திருப்பது தர்மபுரியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
Post a Comment