Search This Blog n

26 July 2013

ஐ.ஐ.டி. பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு? சி.பி.ஐ.!!



சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், ஐ.ஐ.டி. கணிதத் துறையில் பணியாற்றும் டாக்டர் வசந்தா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐ.ஐ.டி. கணிதத் துறையில் கடந்த 1988-ம் ஆண்டு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டேன். 1995-ம் ஆண்டு நடைபெற்ற இணை பேராசிரியர் பணிக்கான தேர்வின் போதும், 1996-ம் ஆண்டு நடைபெற்ற பேராசிரியர் பணிக்கான தேர்வின் போதும் என்னை தேர்வு செய்யுமாறு கோரி விண்ணப்பம் செய்தேன்.
அந்தப் பணிகளுக்குத் தேவையான தகுதிகளையும், அனுபவத்தையும் நான் பெற்றிருந்த போதிலும் என்னை தேர்வு செய்யவில்லை. மாறாக என்னைவிட தகுதிகள் குறைந்த நபர்களை அந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
மேலும் இந்த தேர்வுகளின் போது இடஒதுக்கீட்டு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இடஒதுக்கீட்டை பின்பற்றி இருந்தால், பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த நான் நிச்சயம் தேர்வாகி இருப்பேன்.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை தேர்வுக் குழுவினர் முறையாகப் பின்பற்றாததால் எனக்கு இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதுபோல மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் எம்.ராதாகிருஷ்ணன், என்.மனோகரன் உட்பட பலர் ஆஜராகி வாதம் செய்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்ந நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
1995-ம் ஆண்டு முதல் 26.9.2000 வரை சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இந்த பணி நியமனங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்து சட்டப்படி சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மனுதாரர் வசந்தா, 27.7.1995 முதல் இணை பேராசிரியராகவும், 18.12.1996 முதல் பேராசிரியராகவும் ஐ.ஐ.டி.யில் பணியாற்றி வருவதாக கருதப்பட வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment