ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்பட 7 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பகுர் மாவட்டம், அம்ரபாரா காட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
தும்காவில் நடைபெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பகுர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அமர்ஜித் பலிகார் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து காரில் 3 போலீஸ் வாகனங்கள் அணிவகுக்க மதியம் பகுர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
தலைநகர் ராஞ்சியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கதிகுண்ட் காட்டுப் பகுதியில் உள்ள அம்ரபாரா எனுமிடத்தில் மதியம் 3.45 மணியளவில் சென்றபோது, எஸ்.பி கார் மற்றும் போலீஸ் வாகனங்களை சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
சாலையின் இருபுறங்களில் இருந்து குண்டுகள் சரமாரியாக துளைத்ததால் எஸ்.பி மற்றும் பாதுகாப்பு போலீஸார் நிலைகுலைந்தனர்.
அவர்களால் எதிர் தாக்குதல் நடத்த முடியவில்லை. இந்நிலையில், குண்டுகள் துளைத்ததில் அமர்ஜித் பலிகார் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது கார் ஓட்டுநர் உள்பட 6 போலீஸாரும் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், தாக்குதலில் எஸ்.பி மற்றும் போலீஸார் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், உள்துறை செயலாளர் என்.என். பாண்டே மற்றும் மாநில காவல் துறைத் தலைவர் ராஜீவ் குமார் ஆகியோரை தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்று தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அம்மாநில ஆளுநர் சையது அகமது உத்தரவிட்டார்.
இதற்கிடையே, அங்கு விரைந்து சென்ற போலீஸார் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் இறந்தவர்களின் உடல்களை மீட்டு தும்காவுக்கு கொண்டு சென்றனர். மேலும், காயமடைந்த 3 போலீஸார் அங்குள்ள சர்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தன்பாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இறந்த போலீஸாரில், அசோக் குமார் ஸ்ரீவஸ்தவ், சந்தன் குமார் தாப்பா, மனோஜ் குமார் ஹேம்ராம் மற்றும் ராஜேஷ் குமார் ஷர்மா ஆகிய 4 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இறந்த அமர்ஜித் பலிகார், கடந்த 2003-ஆம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரியாக தேர்வானவர். பகுர் பகுதியில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் மிகவும் சிரத்தையுடன் அவர் பணிபுரிந்து வந்ததாகவும், மாவோயிஸ்டுகளின் தாக்குதல் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றிருந்ததாகவும், தும்கா காவல்துறை துணை ஆணையர் ஹர்ஷ் மாங்காலா தெரிவித்தார்.
இந் நிலையில், தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளைத் தேடும் பணியில் 200 மத்திய துணை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாவது எஸ்.பி.: ஜார்க்கண்ட்டில் கடந்த 2000-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி லோகர்தாகா எஸ்.பி.யாக இருந்த அஜய் குமார் சிங், மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டார். அதன்பின்பு, செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பகுர் எஸ்.பி. கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளில் ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்டுகளால் ஏராளமான போலீஸாரும், பொதுமக்களும் மற்றும் அரசியல் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்களில் சி.பி.ஐ எம்.எல்.ஏ., மகேந்திர பிரசாத் சிங், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ரமேஷ் சிங் முண்டா மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சுனில் மகதோ ஆகியோர் அடங்குவர்.
கடந்த மே 25-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ், மூத்த காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ உதய் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர். இதில் காயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுக்லா மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்
0 கருத்துகள்:
Post a Comment