சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ரூ. 26 கோடிக்கு மேலாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநில சர்ச்சை சாமியார் ராம்பால் (வயது 63) 2006-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார். அதில் ஜாமீனில் வந்த நிலையில், அவர் மீது பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கலானது. அதில் அவர் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்டு பிறப்பித்து, 21-ந் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என அரியானா போலீசுக்கு ஐகோர்ட்டு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து ஆசிரமத்தை சுற்றி வளைத்து சாமியாரை கைது செய்வதற்கு போலீஸ் படை அங்கு விரைந்தது. போலீசார் மீது ஆசிரமத்திற்குள் இருந்து சாமியார் ஆதரவாளர்கள், அவரது ஆர்.எஸ்.எஸ்.எஸ். படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், பெட்ரோல் குண்டுகளை வீசினர். சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. இதற்கிடையே ஆசிரமத்தில் அடைபட்டிருந்த நிலையில், 5 பெண்கள், ஒரு குழந்தை என 6 பேர் உயிரிழந்திருப்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக, சாமியார் ராம்பாலை துணை ராணுவத்தின் துணையுடன் போலீசார் கடந்த 19ம் தேதி கைது செய்தனர்.
இதனையடுத்து கடந்த 20ம் தேதி போலீஸ் காவலுக்கு அனுப்பட்ட சாமியார் ராம்பால் பலத்த பாதுகாப்புடன் இன்று பஞ்சாப் – அரியானா ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே சாமியாரை கைது செய்ய நடத்தப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி ஹிசார் ஆசிரமத்தில் சாமியாரை கைது செய்ய நடத்தப்பட்ட ஆப்ரேஷன் தொடர்பான விரிவான அறிக்கையை அரியானா டி.ஜி.பி. எஸ்.என். வசிஷ்த் தாக்கல் செய்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் சாமியாரை கைது செய்ய ரூ. 26 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுகள் அளித்த தகவலின்படி, அரியானா மாநில அரசு ரூ. 15.43 கோடி, பஞ்சாப் மாநில அரசு ரூ. 4.34 கோடி, சண்டிகார் நிர்வாகம் ரூ. 3.29 கோடி, மத்திய அரசு ரூ. 3.55 கோடி என மொத்தம் 26.61 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு ஆன செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கோர்ட்டு, காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
சாமியார் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட 909 பேர் குறித்து விசாரிக்கவும், கைது செய்யப்பட்டவர்கள், காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களா இல்லை, முன்னாள் படைவீரரா என்பது குறித்து தெரிந்துக் கொள்ளவும் காவல்துறையிடம் கோர்ட்டு கேட்டுக் கொண்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment