சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்டின் கடைசியில் ஆண்களுக்கான ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இதன்படி இந்த ஆண்டுக்கான உலக டூர் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது. இதில் களம் காணும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
‘ஏ’ பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோரும், ‘பி’ பிரிவில் 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். 2012, 2013-ம் ஆண்டு சாம்பியனான ஜோகோவிச், இந்த முறையும்
வாகை சூடினால், 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
6 முறை சாம்பியனான 33 வயதான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் மல்லுகட்டி நிற்கிறார். இந்த போட்டியிலும் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஜப்பானின் நிஷிகோரி, அமெரிக்க ஓபன் சாம்பியனான மரின் சிலிச், கனடாவின் மிலோஸ் ராவ்னிக் ஆகியோர் கவுரவமிக்க இந்த போட்டிக்குள் அடியெடுத்து வைப்பது இதுவே முதல் முறையாகும். முதல் நாளில் நிஷிகோரி-முர்ரே, ரோஜர் பெடரர்-ராவ்னிக் மோதுகிறார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment