பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன். இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடபழனி குமரன்காலனி 9-வது தெருவில் உள்ள பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் மீசை முருகேசன் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மூளையில் ரத்தம் உறைந்து இருந்தது. சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீர் பாதிப்புகளும் அவருக்கு இருந்தன.
தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தார்.
அவரை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்களும் கைவிரித்தனர். இதையடுத்து மீசை முருகேசனை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை 4 மணிக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 85.
மரணம் அடைந்த மீசை முருகேசன் ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் தவில் கலைஞராக பணியாற்றினார். மோர்சிங் வாசிப்பதில் வல்லவராக இருந்தார். பல்வேறு இசை ஒலிகளையும் எழுப்புவார்.
திருமால் பெருமை உள்ளிட்ட பழைய படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டினார். மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக படத்தில் தான் முழு நடிகரானார். விஜய்யுடன் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்களில் நடித்து பிரபலமானார். விஜயகாந்துடன் பெரியண்ணா படத்தில் நடித்தார். கடைசியாக சேரனுடன் பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்தார். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.
வெளிநாடுகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்காக சென்று வந்தார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். பெரிய மீசை வைத்து இருந்ததால் இவரை மீசை முருகேசன் என்று அழைத்தனர்.
மரணம் அடைந்த மீசை முருகேசனுக்கு கண்ணம்மா என்ற மனைவியும் ஜோதி குமார், நாகராஜன் என்ற மகன்களும், சரஸ்வதி, செல்வி என்ற மகள்களும் உள்ளனர். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வடபழனி ஏவி.எம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment