விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் 2002ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு குறைபாடுகளைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பெண்பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ்டோட்ரியர்.
2008இல் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு சிறிலங்காவில் இருந்து வெளியேறிய பின்னர், அளித்துள்ள முதல் செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில்,
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் தீர்வுகளை வழங்க முடியவில்லை. காலாவதியான ஆணையின் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது.
முடிவில் அனைவருமே களைத்துப் போயினர். மனச்சோர்வையும், ஏமாற்றத்தையும் அடைந்தனர்.
கண்காணிப்பாளர்கள் கொடூரமான பல விடயங்களை வெளிப்படுத்தினர்.
தாம் கண்ணால் கண்ட காட்சிகளால் எமது நண்பர்கள், தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது பெரும் மனப்போராட்டத்துடன் சென்றதை நான் அறிவேன்.
அவர்கள் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்காக உழைத்தார்கள்.
அவர்கள் பல்வேறுபட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். குண்டுவெடிப்புகள், கொலைகள் போன்ற கோரமான காட்சிகளை சந்தித்தார்கள்.
சில சந்தர்ப்பங்களில் உதவி கோரிக் கதறியவர்களே கொல்லப்பட்டனர்.
ஆரம்பத்தில் எமது தலையீட்டின் மூலம் சிலரின் உயிர்களையேனும், பாதுகாத்தோம்
இருந்தபோதிலும் தலையிடுவதற்கான ஆணை எமக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
2004இல் நிலைமை மோசமடையத் தொடங்கியது. உண்மையில் நாம் வேறுவழியின்றியே இருந்தோம்.
போர்நிறுத்த உடன்பாடு ஒரு நீண்டகாலத் தீர்வைக் கொண்டதாகவோ, அதன்கீழ் பணியாற்றக் கூடியதாகவோ இருக்கவில்லை.
எனவே, இந்த உடன்பாட்டை முன்னெடுத்துச் செல்வது பெரும் சிக்கலாக இருந்தது. இந்த உடன்பாடு சில கட்டமைப்புக் குறைபாடுகளைக் கொண்டது.
உண்மையில் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அது மேலும் மோதல்களை ஏற்படுத்தவே வழிசெய்தது.
உதாரணத்துக்கு, மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் இதன் வரையறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஒருதரப்பு சட்டபூர்வமான- ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட இறைமையுள்ள அரசாங்கமாகவும், இன்னொரு தரப்பு ஏனைய நாடுகளால் தீவிரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் இருந்த போதிலும், உடன்பாட்டின்படி, இருதரப்புகளையும் நாம் சமமாகவே நடத்தினோம்.
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தனது ஆணைக்கு அமைய முடிந்தவரை சிறப்பாக நடுநிலையாகப் பணியாற்றவும், இருதரப்பையும் சமமாக நடத்தவுமே முயற்சித்தது.
ஆனால், இறுதியில் தெற்கிலுள்ள மக்கள் மத்தியில் இது எடுபடவில்லை.
பெரும்பாலும், சாதாரண அரசியல் செயற்பாடுகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட முடியாதிருந்தது சமாதான வழிமுறைகளில் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.
சிறிலங்கா அரசாங்கத்தின் மீது ஆழமான சந்தேகம் இருந்ததால், ஆயுதக்களைவு விடயத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் உண்மையான திட்டமோ , விருப்பமோ இருக்கவில்லை.
சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் வாய்ப்புக்களை நாம் கொண்டிருந்தோம் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.
ஆனால், அதற்கான கதவு சுமார் ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் தான் திறந்திருந்தது.
குறிப்பாக, விடுதலைப் புலிகள் எப்போது சமாதானப் பேச்சுக்களில் இருந்து வெளியேறினார்களோ, அப்போதே, நிலைமை மோசமடையத் தொடங்கி விட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
அதற்குப் பின்னர், கிழக்கில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு செயற்படுவது சாத்தியமாக இருக்கவில்லை.
பிளவை எதிர்கொள்வதற்கு நாம் தயார்படுத்தப்பட்டிருக்கவில்லை. எந்த அடிப்படையில் இது நடக்கிறது என்பது எமக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.
நாம் இழந்து போனோம். இருதரப்பும் எம்மை அரசியல் ரீதியாகவும் தவறாக வழிநடத்தவும் பயன்படுத்திக் கொண்டன.
எல்லாம் நடந்த பின்னர், ஒரு நோர்டிக் குடிமக்களின் குழுவாக அங்கு தங்கியிருப்பது கடினமாக இருந்தது.” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, 2003 -2004 இலும், 2005 -2006 காலப்பகுதியிலும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஹக்ரப் ஹொக்லன்ட்
“விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதைக்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அனுமதிக்கப்படவில்லை.
எந்த விவகாரத்துக்கும் தீர்வை வழங்கக் கூடியவராக எஸ்.பி எனப்படும் சு.ப. தமிழ்ச்செல்வன் இருந்தார்.
எனவே அவரை அணுக நாம் தயார்படுத்திக் கொண்டிருந்தோம்.
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அருகே எம்மால் செல்ல முடியவில்லை.
அவரது பேச்சாளராக, அவரது அரசியல் ஆலோசகர் வழியாக இயக்கப்படுபவராக தமிழ்ச்செல்வன் இருந்தார்
தவறுகள் நடக்கும் போது, நாம் அவரிடம் அதை எடுத்துச் செல்வோம்.
தமிழ்ச்செல்வனை அணுகும்போது, ஒரு தீர்வைப் பெறமுடியும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.
அவரிடம் நழுவல் போக்கு இருந்தாலும், நாம் முன்கூட்டியே அறிவித்து விடுவோம்” என்று தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment