வாடகை தாய்மார்கள் குறித்த புதிய சட்ட திருத்தத்தை இந்தியா அமல்படுத்தி உள்ளதால் இனி ஆஸ்திரேலியர்களின் வரத்து மிக வெகுவாக குறையும் என தெரிய வந்துள்ளது.வெளிநாட்டில் வாழும் பலர் தங்களால் குழந்தை பெற்று கொள்ள இயலாத பட்சத்தில், விந்து அணுக்களை கொண்டு வந்து வாடகை தாய்மார்கள் உதவியுடன் இந்தியாவில் குழந்தை பெற்று எடுத்து செல்கின்றனர். ஆரம்பத்தில் மிக சிறிய அளவில் நடந்த இந்த தொழில் பின்பு மிக அதிக வருமானம் தரும் தொழிலாக மாறியது. வட இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுத்தர பல மருத்துவ மனைகள் முளைத்தன. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ மனைகளுக்கு இது கல்லா கட்டும் தொழிலாக மாறியது.
வெளி நாட்டில் வசிப்பவர்கள் இதுபோன்ற மருத்துவ மனைகளை தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை கூறினால் போதும், அவர்கள் வெளி நாட்டில் இருந்து இங்கு வந்து தங்குவது, வாடகை தாய் ஏற்பாடு பண்ணுவது முதல் குழந்தை பெற்று கொடுத்து மீண்டும் தங்கள் நாட்டிற்கு குழந்தையுடன் திரும்பி செல்வது வரை என மொத்தமாக ஒரு தொகையை பேக்கேஜ்ஆக கறந்து விடுகின்றனர்.
வட மாநிலங்களில் மக்கள் பலர் வறுமையால் வாடுகின்றனர். தின கூலிக்கே வழி இல்லாமல் தவிக்கின்றனர். இவர்களது ஏழ்மை நிலையை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் புரோக்கர்கள், ஒரு குழந்தை பெற்று கொடுத்தால் 50,000 முதல் 1 லட்சம் வரை பேசி படிய வைக்கின்றனர். தின சாப்பாட்டிற்கே வழி தெரியாத இவர்களுக்கு , கனவிலும் கிட்டாத இந்த தொகை அவர்களை சம்மதிக்க வைக்கிறது.
இந்த "வாடகை தாய்" முறை பல நாடுகளில் நடைபெறுகிறது. ஆனால் வெளி நாடுகளில் இந்த முறையில் ஒரு குழந்தை பெற வேண்டும் என்றல் குறைந்தது $30,000 - $45,000 வரை செலவு ஆகும். ஆனால் இந்தியாவில் ஒரு குழந்தை பெற்று எடுக்க வேண்டுமானால் $15,000 .,க்குள் அனைத்து செலவும் முடிந்துவிடும். எனவே வெளிநாட்டினர், அதுவும் குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் நூற்றுக்கணக்கில் இந்தியாவிற்கு வருகை புரிந்த வண்ணம் இருந்தனர்.
மருத்துவ மனையை பொறுத்தவரை, குழந்தை பெற்று தரும் தாய்க்கு 50,000 முதல் 1 லட்சம். தாய்மார்களை ஏற்பாடு பண்ணும் புரோக்கர்களுக்கு 10,000- 25,000. மேலும் மகப்பேறு செலவு என மொத்தத்தில் 2- 2.5 லட்சம் செலவில் கதையை முடிகின்றனர். எனவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கும் , மருத்துவமனைக்கும் இது நல்ல லாபம் தந்து வந்தது
இந்த நிலையில் இந்தியா "வாடகை தாய்" குறித்த புதிய சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது. இந்த புதிய சட்ட திருத்தப்படி குழந்தை வேண்டி வரும் தம்பதியினர், தங்களுக்குள் திருமணம் ஆகி ,இரண்டு ஆண்டுகள் சேர்த்து வாழ்ந்தும் குழந்தை பிறக்கவில்லை என்றால் மட்டுமே இந்திய தாயை வாடகைக்கு அமர்த்த முடியும். ஆனால் ஆஸ்திரேலிய மக்களின் கலாச்சாரம் மிகவும் மாறுபட்டது. திருமணதிற்கு முன்பே குழந்தை பெற்றுகொள்வது, திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுகொள்வது, திருமணமே செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுகொள்வது ஆஸ்திரேலியாவில் சர்வ சாதாரணம். எனவே இந்தியா அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய சட்ட மாறுதல்கள் ஆஸ்திரேலியர்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே வரும் ஆண்டுகளில் குழந்தை வேண்டி இந்தியா வரும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை மிக கடுமையாக குறையும் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சட்ட திருத்தம் கல்லா கட்டும் மருத்துவ மனைகளுக்கு மிக பெரிய அடியாகி உள்ளது
0 கருத்துகள்:
Post a Comment