Search This Blog n

09 January 2013

இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி



தமிழக மீனவர்கள் கொடூரமாகக் கொல்லப்​பட் டது ஒரு கொடுமை என்றால், அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது கொடுமையிலும் கொடுமை.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவரது விசைப் படகில் விக்டஸ், அந்தோணிராஜ், ஜான்பால், மாரி​முத்து ஆகியோர் கடந்த 2011 ஏப்ரல் 2-ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். நான்கு நாட்களுக்குப் பிறகு, இலங்கை நெடுந்தீவுக்கும் நயினார்தீவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் விக்டஸ் உடல் மீட்கப்​பட்டது. சில நாட்கள் இடைவெளியில் ஜான்பால், அந்தோணி​ராஜ் உடல்கள் தொண்டி அருகிலும், மாரிமுத்துவின் உடல் தலையில்லாத நிலையில் கோட்டைப்பட்டினம் அருகேயும் கரை ஒதுங்கியது. இதில் விக்டஸ், மாரிமுத்து ஆகிய இருவரது இறப்புச் சான்றிதழ் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை என்பது​தான் பிரச்னை.

விக்டஸின் சகோதரர் சின்னதம்பி, ''மீன்​பிடிக்கச் சென்ற எனது அண்ணன் உட்பட நான்கு பேரை சிங்களக் கடற்படையினர் சித்ரவதை செய்து கொன்று இருக்கிறார்கள். எங்கள் அண்ணனின் உடல் சிதைந்து இருந்த​தால், இலங்கையிலேயே போஸ்ட்மார்ட்டம் செய்து ​விட்டனர். சடலத்தைப் பரிசோதனை செய்த இலங்கை டாக்டர், 'கைகள் கட்டப்பட்ட நிலையில் தாக்கி இருக்கிறார்கள். அடித்துச் சித்ரவதை செய்து அரை மயக்க நிலையில் தண்ணீரில் தூக்கிப் போட்டதைப்போல இருக்கிறது’ என்று எங்களிடம் சொன்னார். இலங்கையில் இறந்த எங்கள் அண்ணன், இந்தியக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மாரிமுத்து ஆகியோரின் இறப்புச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இதுவரை கொடுக்கவில்லை. அதனால், எங்கள் குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய இன்சூரன்ஸ் பணம், சொசைட்டி பணம் எதுவும் கிடைக்கவில்லை. ரேஷன் கார்டைக்கூட புதுப்பிக்க முடி யாமல் தவித்து வருகிறோம். முதல்வர் வரை மனு அனுப்பி விட்டோம். எந்த பிர யோஜனமும் இல்லை'' என்று வருந்தினார்.

ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, ''இறந்துபோன மீனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க பலமுறை அதிகாரிகளிடம் பேசிவிட்டேன். தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறேன். ஆனால், அரசு கண்டுகொள்ளவே இல்லை. முதல்வரின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்லப்​போகிறேன்'' என்றார்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபாலிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். ''தி.மு.க. ஆட்சியில் நிகழ்ந்த சம்பவம் இது. இறந்து போன மீனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கவில்லை என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். உடனடியாக அதிகாரிகளிடம் விசாரித்து அவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியாக

0 கருத்துகள்:

Post a Comment