கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க கோரி நடைபெற உள்ள போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"கன்னியாகுமரியில் விவேகானந்தர் ஜெயந்தியையொட்டி நடைபெறும் விழா வில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். திமுக தலைவர் கருணாநிதி வருகிற 19 ஆம் தேதி திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதில் தலைவர் கருணாநிதி,பேராசிரியர் அன்பழகன்,பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.நமது கலாச்சாரம், மொழி, இனம், பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய பொக்கிஷமாக திருக்குறள் விளங்குகிறது.அந்தவகையில் திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் கருணாநிதி அமைத்தார்.
அதைக்கூட இந்த அரசு பாதுகாக்கவில்லை.கருணாநிதி செய்த அனைத்தையும் நிலைகுலைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு செயல்பட்டால் அது நல்லதல்ல.மொழி,இனத்தை பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.
மின்சாரம் இல்லாமல் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது.இந்த ஆட்சியை பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.தமிழக மக்கள் தாங்கள் செய்துள்ள தவறுகளை உணர்ந்துள்ளார்கள்.
வரும் தேர்தல் மற்றும் வரக்கூடிய தேர்தலில் அதை திருத்திக் கொள்வார்கள். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கூட காப்பாற்ற முடியாத அரசு எந்த நல்ல திட்டங்களை செய்திருக்க முடியும்? மின்சாரம் இல்லாமல் எந்த தொழிலை கொண்டு வர முடியும்.
சிறு தொழில்கள் நலிவடைந்து வருகிறது.விவசாயிகள் தற்கொலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
பல ஆண்டுகளாக பாலியல் சம்பவங்கள் நமது நாட்டில் நடந்து வருகிறது.தற்போது, இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.இதற்கும் இந்த அரசு திமுக அரசு மீது பழிபோடக்கூடாது" என்றார்
0 கருத்துகள்:
Post a Comment