மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இடையே நேற்று ஏற்பட்ட பயங்கர மோதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் வெட்டப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசை பதவியிலிருந்து திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இறக்கினார்.
இதனால் திரிணமுல் காங்கிரஸ் மீது கம்யூனிஸ்டுகளுக்கு கடும் கோபம் நிலவுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே சிற்சில மோதல்கள் நடந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் ரசாக் முல்லா, நேற்று முன்தினம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அலிப்பூர் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.
50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அவர்கள் அலிப்பூர் சென்று கொண்டிருந்த போது பாமன்கட்டா என்ற இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்களால் வழிமறித்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பகுதியின் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் அராபுல் இஸ்லாம் தலைமையில் வந்த அந்த கட்சியினர், கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் 15 வாகனங்கள் எரிக்கப்பட்டதுடன் 20க்கும் மேற்பட்டோர் வெட்டப்பட்டனர்.
அராபுல் இஸ்லாம் தலைமையில் வந்த திரிணமுல் காங்கிரசார் தங்களை தாக்கியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் கூறுகின்றனர்.
ஆனால் வாகனங்களில் வந்த கம்யூனிஸ்டுகள், தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் காருக்குள் பதுங்கி உயிர் தப்பியதாகவும் அராபுல் இஸ்லாம் கூறியுள்ளார்.
மேலும் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் மார்பு மற்றும் காலில் காயமடைந்துள்ளதாக கூறியுள்ள அராபுல் இஸ்லாம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த முதல்வரும், கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மோதல் குறித்து அறிந்ததும் நேற்று மதியம் தலைமை செயலகம் விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினார்{புகைபடங்கள், }
0 கருத்துகள்:
Post a Comment