கணவனுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்க, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார் பாதிக்கப்பட்டவரின் மனைவி.
அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து, உடனடியாக மருத்துவக் குழு கூடி, விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலத்தைச் சேர்ந்தவர், அன்பரசி. இவரது கணவர், சிவப்பிரகாசம். இவரது கல்லீரல் செயல் இழக்கும் நிலையில் இருந்தது. எனவே, அவரசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இம்மாதம், 16ம் திகதி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூருவில் இருந்து, கல்லீரல் கொண்டு வரப்பட்டது. இறந்த ஒருவரின் கல்லீரல், சிவப் பிரகாசத்துக்கு பொருத்தப்பட்டது. அந்த கல்லீரல் செயல்படவில்லை. எனவே, மீண்டும் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்பரசி மற்றும் அவரது உறவினர்களிடம், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கல்லீரல் தானம் செய்ய, சிவப்பிரகாசத்தின் நெருங்கிய உறவினரான சாய்வினோத் முன்வந்தார். ஆனால், அரசு நியமித்துள்ள மருத்துவக் குழுவிடம் அனுமதி பெற, கால தாமதம் ஏற்படும் என கருதப்பட்டது. அதேநேரத்தில், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
எனவே, உயர் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று முறையிட, அன்பரசி முடிவு செய்தார். நீதிபதி என்.பால் வசந்தகுமார் முன், நேற்று முன்தினம், அன்பரசி ஆஜராகி முறையிட்டார். "உடனடியாக, கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், கணவர் உயிருடன் இருக்க மாட்டார்' என, கண்ணீர் மல்க கூறினார்.
சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் கோரினார். இதையடுத்து, அன்பரசியின் முறையீட்டை, உடனடியாக மருத்துவக் குழு பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்
0 கருத்துகள்:
Post a Comment