தஞ்சை பொங்கல் விழாவில் நடராஜன் பொங்கி எழுவார்... கோப வார்த் தைகளால் ஜெயலலிதாவைக் கரும்பாகப் பிழிந்தெடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ, 'புரட்சித் தலைவி’ என உச்சரித்து ஆச்சர்யத்தில் அலற வைத்தார். தன்னைக் கைது செய்தது யார் என்று கண்டுபிடிக்கப்(!) போவதாகவும் சொன்னார்!
தன் தந்தை பெயரில் நடத்தி வரும் மருதப்பா அறக்கட்டளை சார்பில், பொங்கல் விழாவை தமிழர் கலை இலக்கிய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார் ம.நடராஜன். இந்த விழா அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு அந்த எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு எகிறியது. நில அபகரிப்பு வழக்கு, நீதிமன்ற அலைக்கழிப்பு, 90 நாட்கள் சிறைவாசம்... இதனால் தன்னுடைய அரசியல் பாதையில் ஏதேனும் புதிய முடிவெடுத்து, விழாவில் அதிரடியாக அறிவிப்பார் என்ற பேச்சு அலைபாய்ந்தது.
விழா நடந்த ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களுமே நடராஜனின் ஒவ்வோர் அசை வையும் உளவுத் துறையினர் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தனர். திவாகரன், மகாதேவன் உள்ளிட்ட சசிகலாவின் நேரடி ரத்த சொந்தங்கள் எவரும் விழாவில் தென்படவில்லை. நடராஜனின் சகோ தரர்களான சுவாமிநாதன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இதைத் தங்கள் வீட்டு விழாவாகவே கருதி எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தனர். அ.தி.மு.க. கரை வேட்டி கட்டியவர்கள் இந்த விழாவில் அதிகமாகவே நடமாடினர்.
விழாவில் பேசிய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், ''டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்காக நாடே துடித்தது. நாங்களும் துடித்தோம். ஆனால், ஈழத்தில் 20 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் சிங்களர்களால் சீரழிக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டபோது, எங்களுக்காக குரல் கொடுக்க வடநாட்டில் யாருமே இல்லை. எங்கள் இசைப்ரியாவை சிங்கள வன்முறைக் கும்பல் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய் ததோடு மட்டும் இல்லாமல், நிழற்படம் எடுத்தும் ரசித்தது. ஆனால், அதைத் தட்டிக்கேட்கத்தான் நாதி இல்லை'' என்று குமுறினார்.
பழ.நெடுமாறன், ''மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து, இரண்டு இந்திய ராணுவ வீரர்களைப் படுகொலை செய்து விட்டால், 'இனி அந்த நாட்டோடு எந்த உறவும் இல்லை’ என்கிறார் மன்மோகன் சிங். இப்போது மட்டும் பொங்குகிற ரோஷம், தெற்கு எல்லையில் 500 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும்போது ஏன் பொங்கவில்லை?'' எனக் கொந்தளித்தார்.
'சமரசமற்ற சமரே... தஞ்சை மகிழ்கிறது இப்போது... தமிழகம் மகிழ்வது எப்போது?’ என்ற ஃப்ளெக்ஸ்கள் வைக்கப்பட்டு இருந்ததால், நடராஜன் நிச்சயமாக அனல் பறக்கத்தான் பேசுவார் என்று அனைவரும் காத்திருந்தனர். நிறைவாகப் பேசிய நடராஜனோ, ''பத்திரிகையாளர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். நான் நல்லது செய்தால், எழுத மாட்டார்கள். நான் வாய் தவறி ஏதாவது ஒரு வார்த்தை பேசிவிட்டால், அதையே நான்கு நாட்களுக்கு 24 மணி நேரமும் போடுவார்கள். நான் எதுவும் தீனி போடுவேனா, மாட்டேனா என்று காதைத் தீட்டி வைத்திருக்கிறார்கள்'' என்று காட்டமாக ஆரம்பித்தவர், ''கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால்தான், காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு இந்த அளவுக்கு பாதகமான நிலை ஏற்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சர்களாகச் சென்றுள்ளவர்கள், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் காவிரிக்காகக் குரல் கொடுக்காமல் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள். வரப்போகும் தேர்தலில் அவர்களை எல்லாம் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். வாக்குச்சீட்டை மாற்றிப் போட்டால்தான் அவர்கள் நம்முடைய வழிக்கு வருவார்கள்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 'புரட்சித்தலைவி’ ஜெயலலிதா அவர்களும் நானும் காவிரி நீர் கேட்டு கடிதம் கொடுத்தோம். நாங்கள் இங்கு வருவதற்குள் காவிரி நீர் வந்து விட்டது. அதுபோல் இப்போது ஏன் மத்தியில் உள்ள தி.மு.க., காங்கிரஸ் அமைச்சர்களால் காவிரி நீரைப் பெற முடியவில்லை? வரப்போகும் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். குறிப்பாக, ப.சிதம்பரம் கண்டிப்பாகத் தோற் கடிக்கப்பட வேண்டும். எப்போது எல்லாம் அவர் நிதி அமைச்சராக வருகிறாரோ, அப்போது எல்லாம் மாநில சுயாட்சிக்குப் புறம்பாக ஏராளமான சேவை வரிகளை விதிக்கிறார்.
உங்களைக் கேட்காமல் எவரும் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை உருவாக வேண்டும்'' எனப் பேசி முடித்தவர், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் மைக் பிடித்து, ''இடத்தை ஆக்கிரமித்ததாகச் சொல்லி என் மீது வழக்குத் தொடர்ந்து, 90 நாட்கள் சிறையில் வைத்து இருந்தனர். வெட்கம் இல்லாத அரசாங்கம் என் மீது வழக்குத் தொடர்ந்ததே தவிர, சார்ஜ்ஷீட் கொடுக்கவே இல்லை. காரணம், அது பொய் வழக்கு'' என்றவர், திடீர் எனத் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, ''என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் யார் என்று கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்கிறேன். எலெக்ஷன் வரும்போது யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்கிறேன். செய்வீர்களா?'' என கேள்வி எழுப்ப... அவரது ஆதாவாளர்கள், ''செய்வோம்... செய்வோம்'' எனக் குரல் எழுப்பினர்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலை எடுத்து பேசியவர், திடீர் என டிராக் மாறி ஆட்சியைத் திட்டியது ஏன் என்பது புரியாமல் விழாவுக்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர்!
0 கருத்துகள்:
Post a Comment