சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை தீக்குளித்து தற் கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் சென்னை காவல் துறையைத் தலைகுனிய வைத்துள்ளது. ''நான் செய்யாத தவறுக்கு லஞ்சம் கேட்டது போலீஸ். எனது மனைவி முன்னால் என்னைக் கேவலமாக நடத்தினர்'' என்று, சம்பந்தப்பட்ட கொத்தவால் சாவடி காவல் நிலையம் முன்பே பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து, ஏழுமலை தன் உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டார்.
ஏழுமலையின் மனைவி மணிமேகலை கதறலுடன் நம்மிடம் பேசினார். ''என் வீட்டுக்காரர் ஆட்டோ ஓட்டுறதாலதான் எங்க பொழப்பு ஓடுது. எங் களுக்கு நவீன், கமல்ராஜ் என்று ரெண்டு பசங்க. 'அவங்களை நல்லாப் படிக்கவைக்கணும். என் கஷ்டம் என் பிள்ளைங்க படக்கூடாது’னு ராப்பகலா ஆட்டோ ஓட்டுவார். ஒரு கெட்ட பழக்கமும் அவருக்குக் கிடையாது. தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருப்பாரு. எந்த வம்புதும்புக்கும் போக மாட்டாரு. இப்ப அவரே இல்லாமப் போயிட்டாரே. நாங்க என்ன செய்வோம்?'' என்று கதறி யவரை சமாதானப்படுத்திவிட்டுத் தொடர்ந்தார் ஏழுமலையின் தங்கை வெண்ணிலா.
''ஜனவரி 2-ம் தேதி காலையில் கொத்தவால் சாவடியில் இருந்து புளியந்தோப்புக்கு ஆட்டோவில் அண்ணன் போய் இருக்கிறார். அந்த நேரத்தில் எதி ரில் பைக்கில் வந்த அன்சாரி என்பவர் ஆட்டோவில் வேகமா மோதிட்டார். மோதினது மட்டும் இல்லாம, 'நீதான் என் மேல மோதிட்டே’னு அண்ணன்கிட்ட சண்டை போட்டு இருக்கார். இதைப் பார்த்துட்டு இருந்த டிராஃபிக் போலீஸ், என்ன நடந்ததுனுகூட விசாரிக்காம எங்க அண்ணனை அந்த இடத்துலேயே அடிச்சு இருக்கார். அதோட ரொம்பக் கேவலமாப் பேசி இருக்கார். 'நீதான் வண்டியை இடிச்சேனு உன் மேல் கேஸ் போடுவேன்’னு மிரட்டியவர், 'கேஸ் போட வேண்டாம்னா, 2,500 ரூபாய் பணம் கொடு’ என்று மிரட்டி, பணத்தையும் வாங்கி இருக்கார். அந்தப் பணத்துல 2,000 ரூபாயை பைக்காரரும் 500 ரூபாயை டிராஃபிக் போலீஸ்காரரும் பிரிச்சு எடுத்துக்கிட்டாங்க.
மறுநாள் காலையில் அண்ணனை கொத்தவால் சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டு, அண்ணி முன்னாடியே மிரட்டி இருக்காங்க. 'நீ தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டினியா? உனக்கு அவ்வளவு தைரியமா?’னு கேட்டு இருக்காங்க. 'நான் பணம் கட்டிட்டேனே... இன்னும் ஏன் என்னை ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டு அசிங்கப்படுத்துறீங்க’னு கேட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டாரு. மறுபடியும் போலீஸ்காரங்க கூப்பிட்டு இருக்காங்க. அண்ணிகிட்ட, 'போலீஸ் ஸ்டேஷன்ல கூப்பிடறாங்க. போயிட்டு வந்துடுறேன்’னு சொல்லிட்டுதான் அண்ணன் போனாரு. அப்பவும் ரொம்ப அசிங்கப்படுத்தி இருக்காங்க. மனசு உடைஞ்சு போய் ஆட்டோவுல இருந்த பெட்ரோலை மேலே ஊத்தி நெருப்பு வெச்சுகிட்டு போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஓடி இருக்கார். இனிமே எங்க அண்ணியையும் குழந்தைகளையும் யாரு காப்பாத்துவாங்க?'' என கதறி அழுதார்.
இதுகுறித்து, கொத்தவால் சாவடி இன்ஸ்பெக்டர் குணசேகரிடம் கேட்டோம். ''போக்குவரத்துப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த யாரோ ஒரு போலீஸ் அதிகாரி இந்த விவகாரத்தை சமரசம் செய்து வைத்து இருக்கிறார். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். சம்பவம் நடந்த அன்று ஆட்டோ டிரைவர் ஏழுமலை உடல் முழுக்க பெட்ரொல் ஊற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி வேகமாக ஓடி வந்தார். உடனே நாங்கள் தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். அங்கேதான் அவர் இறந்துபோனார். அவரின் குடும்பத்துக்குத் தகவல் தந்து வரச் சொன்னோம். மற்றபடி, அவர்கள் சொல்வது அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்'' என்றார்.
போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கருணாசாகரிடம் பேசியபோது, ''ஆர்.டி.ஓ. விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. விசாரணைக்குப் பிறகுதான் நடந்தது என்ன என்பது தெரியவரும். போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதி அளித்தார்.
சமூக சேவகரான டிராஃபிக் ராமசாமி, ''இது காவல் துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல். முதலில், டிராஃபிக் போலீஸார் கட்டப் பஞ்சாயத்து செய்து ஆட்டோ டிரைவரிடம் பணம் வாங்கிக் கொடுத்ததே தவறு. அப்படியே இருவரும் சமரசமாகப் போய் இருந்தாலும், அதை எழுதி வாங்கிப் பதிவுசெய்து இருக்க வேண்டும். இந்தக் கொடுமைக்குக் காவலர்கள் மீது தற்கொலையைத் தூண்டுதல், கொலை முயற்சி உள்ளிட்ட இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ஏழுமலையின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நானே செய்கிறேன்'' என்றார்
0 கருத்துகள்:
Post a Comment