மரணத்துடன் போராடிய மருத்துவ மாணவியின் உயிர் அடங்கியதைக் கண்டு, ஒட்டுமொத்த இந்தியாவும் துக்கம் அனுஷ்டிக்கிறது. டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூர மனம் கொண்ட ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய மாணவி, டிசம்பர் 29-ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
மருத்துவ மாணவியின் உடல்நிலை கடந்த 26-ம் தேதி மோசமான நிலையை எட்டியதை அடுத்து, அவசர அவரசமாக மத்திய கேபினெட் அமைச்சரவை கூடியது. பாதிக்கப்பட்ட மாணவி, அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் என அனைவருக்கும் ஒரு மணி நேரத்தில் பாஸ்போர்ட், விசா ஏற்பாடுசெய்து, சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குத் தனி விமானத்தில் அனுப்பிவைத்தது அரசு. அடுத்த நாள் அதிகாலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு இறந்துபோனார்.
டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டபோதே, அவரது முக்கிய உடல் பாகங்கள் பலவும் செயல் இழந்து, ரத்த அணுக்களின் அளவும் குறைந்துவிட்டது. இதற்கிடையில், நான்கு மணி நேர விமானப் பயணம் மாணவியின் உடல்நிலையை மேலும் மோசமாக்கியது என்கிறார்கள் சிங்கப்பூர் மருத்துவர்கள். சிங்கப்பூர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கெல்வின் லோஹ், ''விமானப் பயணத்தால் மாணவியின் ரத்த அழுத்தம் கடுமையாக குறைந்துவிட்டது. விமானத்தில் இருந்த மருத்துவர்கள் அதனை முழுமையாகச் சரிசெய்தனர். இங்கே கொண்டுவரும்போது நாங்கள் மாணவியின் உடல்நிலையைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். மேலும் அவர், 'செரிபல் எடிமா’ என்னும் மூளை வீக்க நோயால் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தார். ரத்தத்தை உந்தித் தள்ளும் திறனை இதயம் முழுமையாக இழந்துவிட்டது. இதற்கு இடையில் டெல்லியிலேயே மாணவிக்கு ஒரு முறை மாரடைப்பும் ஏற்பட்டு இருந்தது. நிச்சயமாக மாணவியைக் குணப்படுத்த முடியும் என்று நாங்கள் உறுதி அளிக்கவில்லை. ஏனென்றால் மாணவியின் நிலை அந்த அளவுக்கு மோசமாக இருந்தது'' என்று சொல்லி இருக்கிறார்.
கடைசியாக 26-ம் தேதி இரவு 9.30 மணிக்கு தன் தந்தையிடம் பேசிய மாணவி, ''என்னை டின்னருக்குக் கூட்டிட்டுப் போங்கப்பா'' என்று கேட்டிருக்கிறார். பின்னர் கண் அயர்ந்தவர், அதன் பிறகு சுய நினைவுக்கு வராமலே மரணத்தைத் தழுவியுள்ளார். 29-ம் தேதி இறந்த மாணவியின் உடல், உடனடியாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனை முடிந்து இந்திய மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவில் போராட்டக்காரர்களின் கொந்தளிப்பு அடங்கக் காத்திருந்தவர்கள், மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி ராஜீவ் காந்தி விமான நிலையத்துக்கு உடலைக் கொண்டுவந்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் விமான நிலையத்துக்கே சென்று மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவியின் உடல் அவசர அவசரமாக டெல்லியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
டெல்லி மருத்துவ வட்டாரத்தில் பேசினோம். ''மாணவிக்குத் தேவையான எல்லா மருத்துவ வசதிகளும் இந்தியாவிலேயே இருக்கிறது. அவர் இறக்கப்போகும் செய்தி மருத்துவர்களால் 26-ம் தேதி அன்றே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இங்கு இருந்தால் தேவை இல்லாத சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படும் என்பதற்காகவே, மத்திய அரசு அவரை வலுக்கட்டாயமாக சிங்கப்பூருக்குக் கொண்டுசென்றது. டெல்லி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே, உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்துவிட்டன. மாணவி சுயநினைவுக்கு வந்த நேரத்தில் எல்லாம், 'எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள், நான் வாழ வேண்டும்’ என்று தொடர்ந்து போராடினார். அவரது மன உறுதியால்தான் மருத்துவர்களும் நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடினர். குடல், மூளை பாதிக்கப்பட்டு உடலின் சில முக்கிய உறுப்புகளும் செயல் இழந்து, கடைசி நேரத்தில் அவருக்குச் செயற்கை சுவாசமும் செயற்கை ரத்த அழுத்தமும்தான் கொடுக்கப்பட்டது. டெல்லியில் இருந்து சிங்கப்பூர் செல்லும்போதும் அவரின் நிலைமை இதுதான். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், சிங்கப்பூர் மருத்துவமனையில் மாணவிக்கு எந்தச் சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை'' என்றார்கள்.
மாணவி இறந்ததுமே, டெல்லியின் முக்கியப் பகுதிகளும் மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம், சாலை மறியல் எனப் பல வகைகளிலும் மக்கள் அஞ்சலி செலுத்தினர். திங்கள் மதியம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவி பஸ் ஏறிய முனிர்கா பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடத்திய மாணவர்களிடம் பேசினோம். ''இது நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காதது. இனியும் நாங்கள் கத்திக் கூப்பாடு போட்டுப் பயன் இல்லை. அதனால்தான் அமைதியான முறையில் ஊர்வலம் செல்கிறோம். ஆனால், ஆரம்பத்தில் எங்களுடன் போராடிய பாதிப் பேர் இப்போது இல்லை. நாங்கள்தான் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துவைத்தோம். இனியும் நாங்கள் போராட்டங்களை நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து வீதி நாடகம், கூத்து, அமைதி ஊர்வலம் என்று தொடர்வோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்'' என்கிறார்கள் கண்ணீர் மல்க.
மாணவியின் உறவினர்கள் அனைவரும் மாணவி சிங்கப்பூருக்கு செல்லும்போதே டெல்லிக்கு வந்துவிட்டனர். அவர்களில் சிலர், ''அவளுடைய அப்பா ஏர்போர்ட்டில் கூலி வேலை செய்கிறார். அவருக்கு இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். நான் நன்றாகப் படித்து வேலைக்குச் சென்றால்தான், தம்பிகளும் ஒழுங்காகப் படித்து பெரிய ஆளாக வருவார்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அப்பாவால் இவ்வளவு செலவுசெய்து நம்மைப் படிக்கவைக்க முடியாது என்று தெரிந்துகொண்டு, இரண்டு வருடக் கல்லூரிக் கட்டணத்தை கால்சென்டர் வேலைக்குப் போய் அவரே சம்பாதித்துக் கட்டினார். வீட்டில் சும்மா இருக்கும்போது பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பார். அடுத்த வருடம் பிப்ரவரியில் அவருக்குத் திருமணம் செய்யலாம் என்று இருந்தோம். அவருடன் அந்த பஸ்ஸில் போய் இப்போது மருத்துவமனையில் இருக்கிறவர்தான் மாப்பிள்ளை'' என்று சொல்லி அழுகிறார்கள்.
மாணவி படித்த டெஹ்ராடூன் மருத்துவக் கல்லூரி, அவரின் மொத்தக் கல்லூரி கட்டணத்தையும் அவரின் தம்பிகளுக்காகத் திருப்பிச்செலுத்த முடிவெடுத்து இருக்கிறது. டெல்லி பத்திரிகை ஒன்று, இறந்த மாணவிக்கு ஜோதி என்று பெயரிட்டு அழைத்துவருகிறது. உண்மைதான், இந்த ஜோதி எப்போதும் அணையாது, இந்தியப் பெண்களைக் காப்பாற்றட்டும்
0 கருத்துகள்:
Post a Comment