இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.தனபால் கூறியதாவது:
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிறியதும் பெரியதுமாக ஏறக்குறைய 38,500 கோவில்கள் உள்ளன. முதல்வர் ஜெயலலிதாவின் சீர்மிகு அறிவுரைகளின்படி, கோவில்களில் திருப்பணிகள், கும்பாபிஷேகங்கள், பக்தர்கள் வசதிக்கான மேம்பாட்டுத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் உன்னத திட்டமான "அன்னதான திட்டம்" பக்தர்கள் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி ஏறக்குறைய 35 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.
ஸ்ரீரங்கம், பழனி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் விரைவில் மேலும் சில கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
மின்சார தேவையை கருத்தில் கொண்டு, கோவில்களில் சூரிய சக்தி மின்சாரத்தையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. பெரிய கோவில்களில் ஒவ்வொன்றும் 10 கிலோவாட் மின் உற்பத்தி திறனுடனும், கோவில்களில் உள்ள அன்னதான கூடங்கள், சிறிய கோவில்களில் 2 முதல் 5 கிலோவாட் திறனுடனும், சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில், சென்னை, ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்தூர் உள்பட பல்வேறு கோவில்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ராமேஸ்வரம் கோவிலில், 10 கிலோவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் இயக்கத்துக்கு கொண்டுவரப்படுகிறது.
சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக பசுக்களை வழங்குகிறார்கள். இவற்றிலிருந்து கிடைக்கும் பால், அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த பசுக்களை பராமரிப்பதற்கு கோவில்களிலேயே சிறிய அளவில் கோசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய 4 இடங்களில் கோவில்களுக்கு காணிக்கையாக பக்தர்கள் வழங்கும் கால்நடைகளை பராமரிக்க ஒருங்கிணைந்த கோசாலைகள் உள்ளன. இங்கு பராமரிக்கப்படுபவைகளில், உபரி பசுக்கள் மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரையின்பேரில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், கோவில் அர்ச்சகர்களுக்கும் விலையின்றி வழங்கப்படுகின்றன. இதுவரையில் ஏறக்குறைய ஆயிரம் பசுக்கள் வழங்கப்பட்டு அவை நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன.
சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில் உள்பட 30 கோவில்களில் 33 கருணை இல்லங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 11 சிறுமிகளுக்கானவையாகும். கருணை இல்லங்களில், ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் சேர்க்கப்படுகிறார்கள். கருணை இல்லங்களில், பிளஸ்-2 வகுப்பு வரையில் இலவச கல்விக்கு வகை செய்யப்பட்டுள்ளது.
பிளஸ்-2 முடித்தவர்கள் கல்லூரிகளில் தங்கள் மேல் படிப்பை தொடருவதற்கு வசதியாக, அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கல்வி நிலையங்களில் முழுமையான கட்டண விலக்கும், பிற கல்லூரிகளில் 50 சதவீதம் கல்விக்கட்டணம் கோவில் நிதியில் இருந்து படிப்பு முடியும் வரையில் வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கருணை இல்லங்களில் தங்கி படிப்பை முடித்தவர்கள் விரும்பினால், கோவில் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள், கட்டிடங்கள், வீடுகளில் இருந்து பெறவேண்டிய வாடகையை முறையாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், 822.21 ஏக்கர் நிலம், 185 கிரவுண்டு மனை, 54 கிரவுண்டில் கட்டப்பட்ட கட்டிடங்களின் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட சொத்துக்கள் கோவில்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சென்னை மண்டலத்தில் கோவில் சொத்துக்களில் இருந்து 60-70 கோடி ரூபாய்க்கான வாடகை வசூலிக்கவேண்டி உள்ளது. இதை இந்த மாத இறுதிக்குள் வசூலிக்கவேண்டும் என்று கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடகையை செலுத்தாதவர்கள் ஆக்கிரமிப்பாளராக கருதப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில்களில் உண்டியல் வசூல், கட்டண வசூல் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல், வாடகை பாக்கிதாரர்களிடமிருந்து உடனுக்குடன் பணத்தை வசூலிக்குமாறு கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆணையர் ப.தனபால் கூறினார்
0 கருத்துகள்:
Post a Comment