பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, திராவிட கட்சிகள் விருப்பம் காட்டத் துவங்கியுள்ளன. தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்தால், தி.மு.க.,வுக்கு கிடைக்கக் கூடிய லாபம், நஷ்டம் குறித்து, "சர்வே' எடுக்க, தி.மு.க, தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடியின் பிறந்ததினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்கவில்லை. இடதுசாரி கட்சிகளின் தலைவர்களான பிரகாஷ் காரத், பிஸ்வாசை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசினார். பிரதமர் வேட்பாளர் பட்டியலில், முதல்வர் ஜெயலலிதாவும் இடம் பெற்றிருப்பதால், பா.ஜ.,வுடன்
தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்க அவர் விரும்பவில்லை.காங்கிரஸ் தலைவர் சோனியாவை, "மணிமேகலை' என வருணித்ததாலும், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு முன்
வந்திருப்பதாலும், மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மலரும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா மீது குற்றம் சுமத்தப்பட்டால், காங்கிரஸ் மீது தி.மு.க., அதிருப்தி அடையும். அப்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., மற்றொரு கதவையும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளது.
தேசிய அளவில் வீசும் மோடி அலையை, பயன்படுத்திக்கொள்ள தி.மு.க.,வும் தயங்கவில்லை. எனவே தான், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைந்தால், தி.மு.க.,வுக்கு கிடைக்கும் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள், எத்தனை சதவீதம் பாதிக்கும். மோடி அலையினால் தி.மு.க.,வுக்கு எத்தனை சதவீதம் ஓட்டுக்கள் கூடுதலாக கிடைக்கும். தி.மு.க.,வுக்கு லாபம், நஷ்டம் குறித்த கணக்கை கண்டறிய, "சர்வே' எடுக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
மூன்றாவது அணியா?
பா.ஜ.,வுடன் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணி இதுவரை
தமிழகத்தில் வெற்றி பெற்றது இல்லை. அ.தி.மு.க., அல்லது தி.மு.க., ஆகிய கட்சிகளிடம் கூட்டணி வைக்க தான் பா.ஜ., விரும்பும். இரு கட்சிகளுடன் கூட்டணி அமையவில்லை என்றால் தான், மற்ற கட்சிகளை பா.ஜ.,
பரிசீலிக்கும். தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், பெரிய அளவில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்க போவதில்லை. எனவே, மூன்றாவது அணியை அமைப்பது, போகாத ஊருக்கு வழியை தேடுவதற்கு சமம் என்ற கருத்தும் நிலவுகிறது .
0 கருத்துகள்:
Post a Comment