பல்வேறு பாலியல் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கைதி ஜெய்சங்கர், பெங்களூரு மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், கர்நாடகத்தில் தொடர் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஜெய்சங்கர் (எ) சங்கர் (36), பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் உள்ள மத்திய சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிப் பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு சிறையின் 15 அடி உயரமுள்ள இரு சுவர்களையும், 30 அடி உயரமுள்ள பிரதான சுவரையும் தாண்டி குதித்து ஜெய்சங்கர் தப்பினார்.
சிறையில் இருந்து தப்பிய போது, ஜெய்சங்கருக்கு காலில் பலத்த காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிறையின் சுவருக்கு அருகே இருந்த ரத்தக் கறை இதை உறுதிப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர். காயம் ஏற்பட்டுள்ளதால், பரப்பன அக்ரஹாரா பகுதியில் ஜெய்சங்கர் பதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம், கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். பல்வேறு குற்ற வழக்குகளில் கர்நாடகம், தமிழகக் காவல் துறையால் தேடப்பட்டு வந்தார்.
அவரைப் பிடிக்க இரு மாநில அரசுகளும் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், 2011, மே 4-ஆம் தேதி பிஜாப்பூரில் கைது செய்யப்பட்ட ஜெய்சங்கர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெய்சங்கர் மீதான வழக்கு விசாரணைக்காக தும்கூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவர் மீண்டும் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கதவின் பூட்டை போலி சாவியைப் பயன்படுத்தி திறந்து, அங்கிருந்து காவலரின் உடையணிந்து சிறையில் இருந்து ஜெய்சங்கர் தப்பியதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கைதிகளை எண்ணிய போது, அவர் தப்பியது தெரிய வந்தது.
ஜெய்சங்கர் மீது தருமபுரி, சேலம், திருப்பூரில் 13 கொலை வழக்குகளும், பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவாகியுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment