ஜனாபதி பிரணாப் முகர்ஜி, தனது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சென்றார்.
தனி விமானத்தில் கொல்கத்தா சென்று இறங்கிய அவரை விமான நிலையத்தில் மாநில கவர்னர் எம்.கே. நாராயணன், மாநில மந்திரிகள், உயர் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.
கவர்னர் மாளிகையில் அவரை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் என்ன பேசிக்கொண்டனர் என்பது வெளியிடப்படவில்லை.
கொல்கத்தாவில் வங்காள தொழில், வர்த்தக சபை கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய பொருளாதார நிலை குறித்து மனச்சோர்வு அடையவேண்டிய சூழல் இல்லை. இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் நல்ல வலுவான
நிலையில்தான் உள்ளது. ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்துவது கொள்கை வகுப்பவர்களின் (அரசு மற்றும் ரிசர்வ் வங்கி) மனங்களில் தீவிரமாக உள்ளது. இதில் அன்னிய தூண்டல்களை வலுப்படுத்துவதற்கான (அன்னியச்செலாவணி வரத்தை ஊக்குவிக்க) நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் சில குறிப்பிட்ட அம்சங்களில் கவலை இருந்தாலும்கூட, நம்பிக்கை இழக்க அவசியம் இல்லை. நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், தொழில்துறை முதலீடுகளை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சாதகமான பலன்களைத் தரும். இந்திய பொருளாதாரம் விரைவில் சீரடைந்து வளர்ச்சிப்பாதைக்கு செல்லும் என்று நான் நம்புகிறேன்.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மிக தீவிரமாகவும், உறுதியாகவும் தொடர வேண்டும். நமது வளர்ச்சி வளங்கள் கட்டுப்பாடற்று செல்லத்தக்க வகையில் எங்கெல்லாம் மாற்றங்கள் தேவையோ அங்கெல்லாம் அந்த மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.
இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் விவசாயப் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். உணவு தானியங்களின் விலையும் சாதகமாக அமையும்.
உற்பத்தி துறை செயல்பாடுகளை ஊக்குவிக்க ஏற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 1980-களிலிருந்து உள்நாட்டு மொத்த உற்பத்தி ஏறத்தாழ 16 சதவீத அளவிலேயே தொடர்கிறது. சில ஆசிய நாடுகளில் இது 25-34 சதவீத அளவுக்கு உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை 25 சதவீத அளவிற்கு உயர்த்துவதில் உற்பத்திதுறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது என பிரணாப் முகர்ஜி கூறினார்








0 கருத்துகள்:
Post a Comment