உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் உள்ள ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் பொதுஇடத்தை ஆக்கிரமித்திருந்த அத்துமீறலான கட்டிடத்தை இடித்து அகற்றும்படி கண்டோன்மென்ட் வாரிய அதிகாரிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்த கட்டிடத்தில் குடியிருந்தவர்களை காலிசெய்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடிக்க கடந்த 9-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, புல்டோசர் மற்றும் கிரேன் வாகனங்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கண்டோன்மென்ட் அதிகாரிகள் அங்கு வந்து சேர்ந்தனர். காலை 6 மணிவரை வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. அந்த கட்டிடத்தின் ஒருபகுதியில் இருந்த சுவரை புல்டோசர் வாகனம் இடித்து தள்ளியது. அப்போது, வீட்டினுள் இருந்த 7 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கினர். அவர்களில் 4 பேர் பிணங்களாகவும், மூன்றுபேர் உயிருடனும்
மீட்கப்பட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மீரட் நகர மாஜிஸ்திரேட் தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பவ இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு தலைமை வகித்த கண்டோன்மென்ட் நிர்வாகத்தின் செயற்பொறியாளர் அனுஜ் சிங் என்பவரை கைது செய்த போலீசார், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
நேற்று அனுஜ் சிங்கை நீதிபதியின்முன் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அனுஜ் சிங்கை கோர்ட்டுக்கு அழைத்துவந்தபோது அங்கு திரண்டிருந்த சிலர் இந்த சம்பவத்துக்கு காரணமான உதவிப் பொறியாளரையும் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் உத்திரவாதம் அளித்த பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment