அண்மையில் பெங்களூருவில் 500 கோடியில் திருமணம் நடந்து நாடே அலறியது. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகளுக்கு பணத்தை வாரி இறைத்து திருமணம் நடத்தி வைத்தார். நகைகள் வாங்குவதற்காக மட்டும் 100 கோடி அளவுக்குச் செலவழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதுபோன்ற பிரமாண்டத் திருமணங்களுக்கு மத்தியில் தற்போது பணத் தட்டுப்பாடு காரணமாக 500 ரூபாயிலும் நடந்து வருகின்றன. ஐஏஎஸ் ஜோடிகள் கூட 500 ரூபாயில் திருமணம் செய்து
கொள்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன், தெலங்கானாவைச் சேர்ந்த அபே தீவார், பிரீத்தி ஜோடி, தங்கள் திருமணத்தன்று விவசாயிகளுக்கு உதவி செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி, 10 விவசாயிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினர்.
வறட்சியால் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையில் ஆடம்பரத் திருமணங்களும் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் அபே தீவார்- பிரீத்தி தம்பதி தங்கள்
திருமணத்தை மிக எளிமையாக நடத்தினர். மொய் வாங்கும் திருமண வீடுகளில் இருந்து சற்று வித்தியாசத் திருமணமாக அபே- பிரீத்தி திருமணம் அரங்கேறியது. தங்கள் சொந்த சேமிப்பில் இருந்தே இந்த நிதியுதவியை புதுமணத் தம்பதியர் வழங்கினர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த வரிசையில் அவுரங்கபாத்தைச் சேர்ந்த மணமகள் ஷ்ரேயா சேர்ந்துள்ளார். பிரபல தொழிலதிபர் அஜே முன்னோட்டின் மகள்தான் ஷ்ரேயா. அஜே, ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது மகள் ஷ்ரோயாவுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தின்போது ஏழை மக்கள் மனம் நிறைவடையும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென தந்தையும் மகளும் கருதினர். இதையடுத்து, அவுரங்கபாத்தில் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 108 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கத் திட்டமிடப்பட்டது.
இதையடுத்து 2 ஏக்கர் நிலத்தில் வீடுகள் கட்டும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. 20க்கு 12 அடியில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய வீடுகள் கட்டப்பட்டன. ஒரு வீடு கட்டி முடிக்க ஒன்றரை லட்சம் வரை செலவிடப்பட்டது. மகளின் திருமணத்துக்குள் 108 வீடுகளை கட்டி திருமணத்தன்றே பயனாளிகளுக்கு
அளித்து விட வேண்டுமென அஜே யோசித்திருந்தார். ஆனால் திருமண தேதிக்குள் 90 வீடுகளே கட்ட முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு கிராமம் போலவே அதனை ஏற்படுத்தி குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளார் முன்னோட். சுமார் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் இந்த காலனி உருவாக்கப்பட்டுள்ளது.
வீடுகளை யாருக்கு வழங்கலாம் என்பதிலும் முன்னோட் மிகுந்த கவனத்துடன் இருந்தார். உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்குதான் வீடு போய் சேர வேண்டுமென்பதில் உறுதியாக
இருந்தார். இதனால், பயனாளிகளை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்தனர். பயனாளிகள் அனைவரும் திருமணத்தன்று வரவழைக்கப்பட்டனர். திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியர் பயனாளிகளிடம் வீட்டின் சாவிகளை ஒப்படைத்தனர்.
மிகப்பெரிய தொழிலதிபரான அஜே முன்னோட், தனது மகளின் திருமணத்துக்கு ரூ70 முதல் ரூ.80 லட்சம் வரைதான் செலவிட்டுள்ளார். இது குறித்து மணமகள் ஷ்ரேயா கூறுகையில், 'இதுதான் எனது திருமணபரிசு' என கருதுவதாகக் குறிப்பிட்டார்.
தொழிலதிபர் முன்னோட், ''திருமணம் போன்ற சுபகாரியங்களின்போது. இது போன்ற மனநிறைவான செயல்களில் அனைவரும் ஈடுபட வேண்டும். நம்மால் முடிந்த வரை சமூகத்துக்கு உதவியாக இருக்க வேண்டும்'' என்கிறார்.
ஜனார்த்தன ரெட்டி போன்றவர்கள் இருக்கும் நாட்டில்தான் அஜே முன்னோட் போன்றவர்களும் வாழ்கின்றனர்!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment