விநாயகர் சதுர்த்தி என்றாலே, விதவிதமான வடிவங்களில் விநாயகர் நம் தெருக்களில் வலம் வருவார். பொதுவாகவே, தற்போது விற்கப்படும் விநாயகரின் சிலைகளில் செயற்கை வேதிப்பொருள்களும் ஃபேப்ரிக் நிறங்களும் நிறைந்திருக்கும்.
இப்படியான சிலைகளை கடலில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
சுற்றுச்சூழல் பாதிப்படையாத வண்ணம் காளஹஸ்தி கோயிலில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. விநாயகர் சதுர்த்திக்கு இயற்கை வண்ணங்களால் ஆன விநாயகர் சிலையை வழிபாட்டுக்கு வைத்துள்ளனர். அந்த சிலைகளை வடிவமைத்தவர் ஜலகண்டேஸ்வரர். ஃபைன் ஆர்ட் படித்த இவர் பாரம்பரியமாக மண்பாண்டம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த விநாயகருக்கு வண்ணம் தீட்டியவர் பண்டைய கால ஓவியங்கள் பற்றிய ஆராய்ச்சிசெய்யும் ஓவியர் ஏகன் ஏகாம்பரம்.
"விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் விநாயகர் சிலைகளில் பல வகையான கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.அவற்றை கடலிலோ ஆற்றிலோ கிணற்றிலோ கரைக்கும்போது அதில் உள்ள கெமிக்கல்கள் தண்ணீருடன் கலந்து நீர் மாசுபாடு ஏற்படுகிறது; நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இப்படியான சூழலை மாற்ற, நாம் சிறுசிறு முயற்சிகள் எடுத்தாலே போதும். அதன் ஆரம்பப் புள்ளியாகத்தான் காளஹஸ்தி கோயிலில் விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பாக செய்யப்பட்ட விநாயகர் சிலை. களிமண்ணால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலைக்கு இயற்கையான மூலிகைகள் கொண்டு வண்ணங்கள் தீட்டப்பட்டன. வண்ணங்கள் கடுக்காய், கற்றாழை, சுண்ணாம்பு, செந்தூரம், காபி கட்டி, மரக்கோந்து போன்ற இயற்கைப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்டன.
இந்த இயற்கை வண்ணங்கள் மிகவும் பளிச்சென்று இருக்கும். இந்த இயற்கை வண்ணங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், இந்த சிலைகளை கடலிலோ ஆற்றிலோ கிணற்றிலோ கரைப்பதால் நீர் மாசுபாடும் ஏற்படாது; நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாது.
இந்த இயற்கை களிமண் விநாயகர் சிலையை உருவமைக்க மூன்று நாள்கள் ஆனது. களிமண்ணின் ஈரத்தன்மை மற்றும் தட்ப வெப்பநிலை போன்றவற்றால் சிலையில் வண்ணம் தீட்டுவது சற்று சவாலாக இருந்தது. இதற்கு அதிக நேரங்கள் செலவிடவேண்டியிருந்தது. ஆனால், ஒரு புதிய முயற்சிக்கு சற்று கால அவகாசமும் வேண்டும்தானே."
என்று உற்சாகத்துடன் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment