Search This Blog n

23 January 2021

தனியார் விடுதி உரிமையாளர் காட்டு யானை மீது தீ வைத்தார்

காட்டு யானை மீது தீ வைத்த தனியார் விடுதி உரிமையாளர்– பாய்கிறது குண்டர் சட்டம் மனிதன்‌ மட்டுமே சமூகமாக வாழக்கூடியவன். உணர்ச்சிகளை அனைத்து மிருகங்களும் வெளிப்படுத்தும், ஆனால் பிறரது உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மனிதர்கள் தான் என்கிறது சமூக அறிவியல். 
அதனால் தான் மனிதர்களை மட்டுமே சமூகம் என்கிறோம். சிங்க சமூகம், புலிச் சமூகம், மாட்டுச் சமூகம் என்று நாம் குறிப்பிடுவதில்லை. மனிதனை மட்டுமே மனித சமூகம் ‌என்று குறிப்பிடுகிறோம்.
ஆனால் பல‌‌ நேரங்களில் அக்கம்பக்கத்திலும், செய்தியிலும் கேட்கும் சில சம்பவங்கள் மனிதன் குறித்த சமூக அறிவியலின் கோட்பாடுகளை பொய்யாக்கி, அறிவியலை மெய்யாக்குகின்றது. எப்படியாயினும் விலங்கியல் மனிதனை விலங்காகத் தான் 
வகைப்படுத்துகிறது.
உதகையின் மசினகுடியில் சமீபத்தில் நடந்த நெஞ்சை பிளக்க வைத்த ஒரு சம்பவம், மனிதம் குறித்தும் விலங்குகள் குறித்தும், மறுமதிப்பீடுக்கு வகை செய்யும் போல், 40 வயது மதிக்கத்தக்க ஒரு கொம்பன்‌ யானை பல வருடங்களாக அங்கிருக்கும் யாருக்கும், எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஊருக்குள் சுற்றி வந்திருக்கிறது.
அந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோள்பட்டையில் எலும்புகள் முறிந்த நிலையில் சுற்றித் திரிந்தது. இதனையடுத்து வனத்துறையினர் மருத்துவம் அளித்து வந்த சூழலில், இரண்டு
 நாட்களுக்கு முன்னர் கடுமையான தீக்காயங்களுடனும், அமிலத்தினால் ஏற்பட்ட அதீத காயங்களாலும் ஒரு பக்க காது கிழிந்து தொங்கிய நிலையில், இரத்தம் சொட்டச் சொட்ட ஊருக்குள் 
சுற்றி வந்தது.
அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு மருத்துவம் அளித்தும் பயனளிக்காத நிலையில், வனத்துறையினரால் மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சைக்காக யானைகள் முகாமுக்கு கொண்டு
 செல்லப்பட்டது.
ஆனால் எதிர்பாராதவிதமாக யானையை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரை விட்டது. அதை நிச்சயம் பிழைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில், பல நாட்களாக அதற்கு சிகிச்சை அளித்த வனத்துறை ஊழியர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை 
பதற வைத்தது.
பரிசோதனையில் அந்த யானையின் காதில் ஏற்பட்ட காயத்தில் அதிகமாக இரத்த இழப்பு ஏற்பட்டு இரத்தத்தை இழந்ததால் தான் உயிரிழக்க நேர்ந்தது எனத் மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில் யானை மீது வாகன எரிபொருளை நனைந்த தீப்பந்தத்தை எரிந்தவர்கள் தனியார் விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரியவந்தது.  
இதனையடுத்து மசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கவுசல் தெரிவித்துள்ளார்.
மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவின் பேரில், காட்டுயானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்த தனியார் விடுதிக்கு கூடலூர் வனத்துறையினர் சீல் வைத்தனர்.
இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன் உள்ளிட்ட வனத்துறையின் தனிப்படையினர் தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல வருடங்களாக யாருக்கும் தீங்கிழைக்காமல் சுற்றி வந்த யானையின் சகிப்புத்தன்மையையும், அதன் இருப்பை சகிக்க முடியாமல், அதன் மீது திராவகமும், நெருப்புப் பந்தத்தையும் வீசிய மனிதர்களையும் ஒப்பிடுகையில், மனிதன் என்ற வரையறைக்குள்ளே மனிதன் வருகிறானா என்ற 
சந்தேகம் வருகிறது.
இருப்பினும் அந்த வனத்துறை ஊழியர்களின் செயல், மனிதம் இன்னும் மனிதருள் அழியவில்லை என்ற 
ஆறுதலை தருகிறது!

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment