Search This Blog n

20 January 2014

முதலமைச்சரை கடத்த தீவிரவாதிகள் திட்டம்

 டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறையில் உள்ள தங்கள் அமைப்பைச் சேர்ந்த யாசின் பட்கலை வெளியில் கொண்டுவருவதற்காகவே கேஜ்ரிவாலைக் கடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக, உளவு அமைப்புகளிடமிருந்து தங்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளதாக டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி காவல் துறையின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு பிரிவினர் இந்த தகவலை கேஜ்ரிவாலிடம் கூறி, ‘இசட்' பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கேஜ்ரிவால் கூறுகையில்,
“என் உயிரைப்பற்றி கவலை இல்லை. எந்தவித பொலிஸ் பாதுகாப்பையும் நான் ஏற்கப்போவதில்லை” என்றார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பாதுகாப்பு வழங்க டெல்லி பொலிஸார் முன்வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டார் கேஜ்ரிவால். விஐபி கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவதே ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை என அவர் கூறி வருகிறார். இந்நிலையில்தான் அவரைக் கடத்தப்போவதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்திய-நேபாள எல்லையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் திகதி பட்கல் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பட்கல் கிராமத்தைச் சேர்ந்த பட்கலுக்கு அகமதாபாத், சூரத், பெங்களூர், புணே, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நிகழ்ந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
பெங்களூரில் உள்ள சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பட்கலிடம் விசாரணை நடத்த கர்நாடக போலீஸுக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

முன்பு சிமி இயக்கத்தினருடனும் தொடர்பு வைத்திருந்த பட்கல், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

Post a Comment