. இந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடுக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது,
இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10,340 பேர், மியான்மரை சேர்ந்த 4,621பேர், இலங்கையைச் சேர்ந்த 1,02,241பேர், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்கள் உட்பட 1,01,148பேர் உள்ளனர்.
அகதிகள் என கூறப்படும் வெளிநாட்டினரை கையாளுவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு 2011 டிசெம்பர் 29ஆம் திகதி மத்திய அரசு ஒரு வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் மூலம் பாதுகாப்பு சரிபார்ப்புக்கு பின் சம்பந்தப்பட்ட அகதிகளுக்கு நீண்ட கால விசா வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களால் பரிந்துரைக்கப்பட முடியும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் நீண்ட கால விசா அனுமதி பெற்ற வெளிநாட்டவர் தனியார் துறையில் வேலை செய்யவோ அல்லது கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலவோ அனுமதிக்கப்படுவர் என்று அதில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment