மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடியில் இறைவனின் அவதாரமாக, கண்கண்ட தெய்வமாக வீற்றிருந்து சாய்பாபா அருள்பாலித்து வருகிறார்.
அவர் யார்? அவரது பெற்றோர்கள் யார்? அவர் எங்கிருந்து சீரடிக்கு வந்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
சீரடியில் இந்துக்கள், முஸ்லிம்களின் பணி விடைபெற்று வாழ்ந்த அவர் 1918–ம் ஆண்டு சமாதி ஆனார். அவர் சமாதி ஆலயத்தில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் வழிபட்டு பலன் அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சீரடி சாய்பாபா பற்றி துவாரக சங்கராச்சாரியார் சுவரூபனாந்த சரஸ்வதி சுவாமி கடுமையாக விமர்சனம் செய்தார். சீரடி சாய்பாபா ஒரு முஸ்லிம் அவரை பற்றி எந்த வேதத்திலும், சாஸ்திரத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனவே அவரை இந்து கடவுள்களுடன் சேர்த்து வழி படக்கூடாது என்றார்.
துவாரக சங்கராச்சாரியாரின் இந்த பேச்சு நாடெங்கும் உள்ள சாய் பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நேற்று சங்கராச்சாரியாரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
‘‘துவாரக சங்கராச்சாரியாருக்கு, சீரடி கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை பார்த்து பொறாமை ஏற்பட்டு விட்டது. அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்’’ என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே லக்னோவில் உள்ள சீரடி சாய் பக்தர்கள் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் அவர்கள், சீரடி சாய்பாபாவை அவதூறாக பேசிய துவாரகா சங்கராச்சாரியார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் சாய் பக்தர்களுக்கும் துவாரகா சங்கராச்சாரியார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
உலக அளவில் புகழ் பெற்று வரும் சீரடி சாய் ஆலயத்தில் 2012–13ம் ஆண்டு பக்தர்கள் மூலம் 410 கோடி ரூபாய் உண்டியல் வசூல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment