கச்சதீவை திரும்பப் பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சதீவை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அம் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கச்சதீவு என்றுமே தமிழகத்துக்கு சொந்தமான பகுதியாக இருந்ததில்லை என்றும், இந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவதோ, இரத்து செய்வதோ முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
மேலும், தமிழக அரசின் சார்பிலும் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கருணாநிதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுதலை, தமிழக அரசின் பதில் மனு மீதான எதிர் பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கேட்டார்.
அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment