சேலத்தில் இருந்து சென்னைக்கு ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான, 23 டன் எடையுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்தபோது, ரயிலின் மேற்கூரையை உடைத்து கொள்ளையர்கள் ரூ.5.75 கோடி பணத்தை, துணிகரமாக கொள்ளையடித்து சென்ற
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் வங்கிக்கு சொந்தமான ரூ.342 கோடி (23 டன் எடை) பழைய ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக தனியாக ஒரு பெட்டி ரிசர்வ்
செய்யப்பட்டிருந்தது.
சென்னை எழும்பூருக்கு இன்று காலை 4 மணிக்கு ரயில் எழும்பூர் வந்துள்ளது. பிறகு சேத்துப்பட்டிலுள்ள யார்டுக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டது. காலை 11 மணியளவில், பணத்தை எடுக்க சென்ற ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், பணம் வைக்கப்பட்டிருந்த 228 பணப் பெட்டிகளில் 16 பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளேயிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்தில் பரிசீலனை நடத்தினர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தடயவியல் நிபுணர்கள்
ஆய்வு நடத்தினர்.
ரயிலின் மேற்கூரையில் ஓட்டை போட்டு உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ரயில், உளுந்தூர்பேட்டை, விருதாசலம் உள்ளிட்ட பல முக்கிய ரயில் நிலையங்களில் நின்று வந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்கள் குறித்து காட்சி பதிவாகியிருக்கலாம்
என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை கொண்டுவரப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.342 கோடியாகும். அதில் திருடப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.5.75 கோடி
என்று மாலையில் அதிகாரிகள் அறிவித்தனர். காலை முதல் மாலைவரை பணத்தை
கணக்கெடுக்கும் பணி நடந்து வந்தது. தமிழக சட்டசபை தேர்தலின்போது 3 கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரிசர்வ்
வங்கி பணத்தை சுற்றியே இன்னும் மர்மம் விலகவில்லை. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தொடர்பான மற்றொரு பணப் பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment