குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்துக்கு பல்வேறு சாதனங்களை தனியார் நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க துறைமுக அதிகாரிகள் சீனிவாசலு, குமேத்கர் ஆகியோர் லஞ்சம் கேட்டனர்.
சீனிவாசலுக்கு ரூ.2½ லட்சமும், குமேத்கருக்கு ரூ.1½ லட்சமும் லஞ்சம் தர பேரம் பேசப்பட்டது. அவை அனைத்தையும் புதிய ரூபாய் நோட்டுகளாக தர வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்நிறுவன உரிமையாளர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசாரின் ஏற்பாட்டின்படி நேற்றுமுன்தினம் அந்நிறுவன உரிமையாளர் ரூ.4 லட்சத்தை புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக கொண்டு வந்தார். அதிகாரிகளுக்கு பதிலாக இடைத்தரகர் ருத்ரேஸ்வர் சுனாமுடி அந்த பணத்தை வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை பிடித்து விசாரித்த போது அதிகாரிகள் அனுப்பியதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சீனிவாசலு, குமேத்கர், ருத்ரேஸ்வர் சுனாமுடி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குமேத்கர் வீட்டில் சோதனை செய்த போது ரூ.40 ஆயிரம் சிக்கியது. மொத்தம் ரூ.4.40 லட்சம் புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தனியார் நிறுவன உரிமையாளர் இது குறித்து கூறுகையில், அதிகாரிகள் வற்புறுத்தி லஞ்சம் கேட்டதால் நான் என்னிடம் இருந்த பணம் மற்றும் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கி கொண்டு வந்தேன் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment