சுவிஸ் பாங்குகளில் கறுப்பு பணத்தை மீட்காமல் சாதாரண ஏழை மக்களின் சுருக்கு பையின் பணத்தை மட்டுமே பிரதமர் மோடி பறித்துள்ளார் என்று தமிழக காங்., கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆவேசமாக பேசினார்.
தமிழ்நாடு காங்., கமிட்டி நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட அளவிலான மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பாளை நுாற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில் தமிழக காங்., கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:
மத்திய அரசு 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது பிரமதர் மோடியின் துக்ளக் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. அவசர கோலத்தில் மக்களை பற்றி சிந்திக்காமல் இந்த அறிவிப்பை மோடி வௌியிட்டுள்ளார்.
இதில் மக்களின் பிரச்னைகளை அகில இந்திய காங்., கமிட்டி துணைத் தலைவர் ராகுல் பாங்க் வாசலில் கேட்டார். ஆனால் அரசியலுக்காக ராகுல் இவ்வாறு செய்வதாக எதிர்க் கட்சியினர் பிரசாரம் செய்தனர். ஆனால் அதற்குள் மோடியின் தாயார் பாங்கிற்கு சென்று பழைய நோட்டுகளை மாற்றியது அரசியல் விளம்பரத்திற்காக செய்தாரா என்பதை விளக்க வேண்டும். பெற்ற தாயை கவனிக்காத பிள்ளை நாட்டின் பிரதமராக இருப்பது துரதிருஷ்டம். தாய்க்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்காமல் பாங்கிற்கு அனுப்பிய பிள்ளை இந்திய நாட்டின் தாய்மார்களை காப்பாற்ற போவதாக கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.
இந்தியாவில் தற்போது 2100 கோடி எண்ணிக்கையில் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் 300 கோடி கரன்சி அச்சடித்தால் கூட இதற்கு 7 மாதங்கள் ஆகும் என முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுவரை 500ரூபாய் புதிய நோட்டுகள் மக்களுக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே 1௦௦, 5௦ மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விட்டு புதியதாக 2 ஆயிரம் நோட்டுகளை அச்சடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக முதலில் ௨ ஆயிரம் நோட்டுகளை அச்சடித்து பிற நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது ௨ ஆயிரம் நோட்டுகள் கிடைத்தாலும் இதற்கு சில்லறை யாரும் கொடுப்பதில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து தெரியாத அரசாங்கத்தை மோடி நடத்தி வருகிறார்.
இதில் குறிப்பாக, 2ஆயிரம் நோட்டுகளை அச்சடிக்க பிரதமர் மோடிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி ரிசர்வ் பாங்க் அனுமதி பெற்று இதனை அச்சடிக்க வேண்டும். ஆனால் இதற்கான விதிமுறைகளை கடைபிடிக்காமல் சர்வாதிகாரி ஹிட்லர் போல் மோடி செயல்படுகிறார். இதுசம்பந்தமாக கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறித்த மோடி எதற்கு புதியதாக ௨ ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தார். 2 ஆயிரம் நோட்டுதான் வேண்டும் என்று மக்கள் யாரும் கேட்கவில்லை. புதிய ௨ ஆயிரம் நோட்டுகளால் கறுப்பு பணம் அதிகரிக்குமே தவிர குறையாது.
பிரதமராக மோடி பதவியேற்றதும் சுவிஸ் பாங்குகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் கணக்குகளிலும் ௧௫ லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தற்போது சாதாரண ஏழை மக்களின் சுருக்கு பையில் இருந்த பணத்தை பறித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஆனால் அதற்காக மக்கள் படும் துன்பங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முடங்கி கிடப்பதால் 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் விவசாயிகளுக்கு வழங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழகம் இந்த பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த நித்திரையில் காணப்படுகிறது. நல்லாட்சி, கெட்டாட்சி என்பதற்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா, படுத்துள்ளதா, அல்லது துாங்குகிறதா என்பது தெரியவில்லை.
தமிழக முதல்வர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பி மக்கள் சேவைகளை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோாம். முதல்வர் ஜெயலலிதாவை முதலில் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தவர் ராகுல். இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருந்த போது நேரில் வந்து நலம் விசாரித்தவர் இந்திரா காந்தி. அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கான சிகிச்சைகளுக்கு இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி பெரிதும் உதவி செய்ததை அதிமுகவினர் மறக்க கூடாது.
தற்போது கூட்டணி எதுவும் இல்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை, ராகுல் காந்தி பார்த்து சென்றார். தற்போது திமுகவுடன்தான் கூட்டணியில் தொடருகிறோம். பாண்டிச்சேரியில் காங்., வேட்பாளர் முதல்வர் நாராயண சுவாமி வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 3 சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக் கொள்கிறோம்.
முதல்வர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் ஆஸ்பத்திரியில் இருக்காமல் கோட்டைக்கு சென்று மக்கள் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
காங்., கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். நல்ல இளைஞர்களை அந்தந்த வட்டார சீனியர் தலைவர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பதவி அளிக்க பரிந்துரை செய்ய வேண்டும். வட்டார நிர்வாகிகள், மாவட்ட மற்றும் மாநில பொறுப்புகளுக்கு வர வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கட்சி சின்னத்தில் போட்டியிடும் சுமார் 20 ஆயிரம்
பதவிகளுக்கு திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கட்சி சார்பற்ற சுமார் 1.50லட்சம் பதவிகளில் அனைத்து வார்டுகளிலும் காங்., கட்சியினர் போட்டியிட்டு வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
கட்சியின் அடிமட்ட அளவில் பலப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில் 22 சதவீத ஓட்டு வங்கியை மீண்டும் பெற வேண்டும். வரும் காலங்களில் காங்., கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் வகையிலோ அல்லது கூட்டணி ஆட்சி அமையும் வகையிலோ காங்., கட்சியினர் முழு வீச்சில் பாடுபட வேண்டும்.
நான் காங்., கட்சியின் மாநில தலைவர் போல் செயல்படாமல் கட்சியின் முதல் தொண்டன் போல் செயல்படுகிறேன். எப்போது வேண்டும் என்றாலும் என்னை அணுகி கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம். வாரம் ஒரு நாளாவது கட்சிக்காக முழுமையாக பணி செய்ய வேண்டும்.
தமிழக காங்., கமிட்டி தலைவராக என்னை நியமித்த ராகுல் நம்பிக்கையை காப்பாற்ற, அவரை பிரதமர் பதவியில் அமர்த்த எனது உடல், பொருள், ஆவி என்று எதையும் பாராமல் எந்த தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறேன். இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மாநில தலைவர் பேசினார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment