திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரை ஒட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பாப்பாம்பாடி கிராம எல்லைக்குட்பட்ட ஆர்.மஹாவீர் ஜெயினின் குமாரர்கள் ராஜேஷ்குமார், வினோத்குமார் ஆகியோருக்கு சொந்தமான விவசாயம் நிலம் உள்ளது. அந்த நிலத்தைப் பார்வையிட அவர்கள் செல்லும்போதெல்லாம் நாக வடிவம் கண்களில் படுவதும் மறைவதும் வழக்கமான ஒன்றாக இருந்ததாம்.
முதலில் இதனை ஒரு சாதாரணமான விஷயமாக நினைத்தவர்கள், கடவுளை நினைக்கும்போதும், இரவில் தூங்கும்போதும் ஒரு உருவம் தோன்றி மறைந்ததை கண்டு குழப்பமடைந்தனர். இதுகுறித்த விவரங்களை தங்களுக்கு தெரிந்த சிவாச்சாரியார்களையும் மற்றும் பெரியோர்களையும் சந்தித்து கருத்து கேட்டனர்.
நாக வடிவம் தோன்றி மறைவது நல்ல விஷயம்தான். இருந்தாலும் தெய்வ பிரசன்னம் பார்ப்பதே நல்லது என கருத்து கூறினார்கள். பின்னர் போளூர் சங்கரா வேதபாடசாலை ஆசிரியர் மகாபலேஸ்வர்பட் அவர்களைக் கொண்டு தெய்வபிரசன்னம் பார்த்து கேட்டனர். ஒரு நல்ல நாளில்
தெய்வபிரசன்னம்
பார்க்கப்பட்டதில் ஒரு சித்தர் அந்த இடத்தில் வாழ்ந்து கொண்டுள்ளதாகவும், பல வருடங்களுக்கு முன்னால் இயற்கையின் இடி மின்னலாக தோன்றி ஒரு கருங்கல் மீது திரிசூலம் போல் இறங்கியிருப்பதாகவும் கூறினார். திரிசூலத்தின் மீது இறங்கியுள்ள மாபெரும் சக்தி என்னவென்று
பார்த்தபோது,
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஒளி (தீ) போல் இறங்கியிருக்கும் சக்தி பிரபஞ்சத்தைக் காத்தருளும் மும்மூர்த்திகளின் தேவியாகிய ஸ்ரீ தாய் முகாம்பிகை என தெரியவந்தது.
திரிசூலம் குடிகொண்டிருக்கும் அற்புதமான விக்ரஹத்தை அனைவரும் காண வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் மண்ணில் மறைந்திருக்கும் மகோன்னத சக்தியை மக்கள் அனைவரும் தரிசிக்க ஏதுவாய், ஒரு புதிய ஆலயத்தை கட்ட வேண்டுமென
பிரசன்னம் கூறியது.
புதிய ஆலயம் அமைப்பதற்கு முன் கர்நாடகா மாநிலம், கொல்லூர், ஸ்ரீ தாய் மூகாம்பிகையை தரிசித்துவிட்டு அம்மனின் ஆசியுடன் ஆலயத்திலிருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டது. பின்னர் பூமி பூஜை நடத்தி 11.05.2014 அன்று கும்பாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீ தாய் மூகாம்பிகை கோயில். அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலைக்கு வடக்குபுறமும், போளூரின் பழம்பெருமையை உலகிற்கு சொல்லும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு கிழக்கு புறமாகவும், தேவிகாபுரத்தில் அருளே வடிவாகக் காட்சி அளிக்கும் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு மேற்கு புறமாகவும், சக்தி பீடங்களில் ஒன்றான படைவீடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலுக்கு தெற்கு புறமாகவும் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் சுமார் 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இந்த ஆலயம் பஞ்சபூத அம்சங்கள் நிறைந்த ஆலயமாக விளங்குகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் சூழ்ந்து தன்னுடைய அருள் ஒளியை அகிலத்திற்கும் பரப்புகிறாள் அன்னை ஸ்ரீ தாய் மூகாம்பிகை!
பஞ்சபூதங்களில் ஒன்றான (நிலம்) பூமியில் பல்லாண்டுகளுக்கு முன்பு இயற்கையின் மாற்றங்களால் கருங்கல்லின் மீது மின்னலாய் (நெருப்பு) இறங்கி, திரிசூல குறி கொண்ட விக்ரகத்தைச் சுற்றி ஆற்றுப்படுகை (நீர்) சுற்றிலும் உள்ள மூலிகை மரங்களில் இருந்து நறுமணத்தை ஆலயத்திற்கு தரும் (காற்று) பரந்த வெளியில் (ஆகாயம்) தனது அன்பான ஆட்சியை நடத்தும் அன்னை மூகாம்பிகை என பஞ்சபூதங்களும் தன்னகத்தே கொண்ட இருப்பிடம் இது!
ஆலயம் கிழக்கு புறம் பார்த்ததுபோல அமைந்துள்ளது. நுழைவுவாயிலில் மனிதர்களின் விதிகளை நிர்ணயிக்கும் கிரகங்களான நவக்கிரகங்கள் ஒருபுறமும், மறுபுறம் நாகமாக தோன்றும் நாக சித்தரை நினைவுபடுத்தும் வகையில் நாக வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
படிகளின் மூலம் மேலே சென்றவுடன் மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்குள் அன்னையின் வாகனமான சிம்ம வாகனம் (பலிபீடம்) அமைக்கப்பட்டுள்ளது.
மூலவர் அறைக்கு முன்னதாக இரண்டு புறமும் முழுமுதற் கடவுள் வினைதீர்க்கும் விநாயகரும், தமிழ்க்கடவுள் அழகு பாலமுருகனும் அருள்பாலிக்கிறார்கள்.
உள்ளே இயற்கையில் மின்னலாய் இறங்கிய திரிசூல குறி கொண்ட விக்ரகம் நிறுவப்பட்டுள்ளது. ஆகமமுறைப்படி நிர்மாணிக்கப்பட்ட அன்னையின் திருவுருவச் சிலை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) நீரிலும், தானியத்திலும், நாணயத்திலும் வைக்கப்பட்ட பிறகு பிரதிஷ்டை
செய்யப்பட்டு
தாமரை பீடத்தில் அமர்ந்து அமானுஷ்ய சக்தியுடன் பரிபூரணமாக அருள்பாலித்து உலகின் ஒளிவெள்ளமாக கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள் ஸ்ரீ தாய் மூகாம்பிகை
அம்மன்!
பக்தர்கள் வலம் வருவதற்கு வசதியாக பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல்கோபுர விமானத்தில் கலசம் இயற்கையைக் காக்கும் சக்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
கருவறையின் கீழ்தளத்தில் தியான மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத அம்சம் கொண்ட இந்தத் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து அன்னையின் அருள் பெறுவது பக்தர்களின் பூர்வஜென்ம புண்ணியமாகும்.
மண்டபத்தின் நடுப்பகுதியில் அழகிய வடிவத்தில் ‚ஓம்‘ அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் அருகில் பிருந்தாவனம் அமைக்கப்பட்டு நறுமணங்கள் நர்த்தனமாட பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிருந்தாவனத்தின் முன்புறம் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் விதமாக 27 வகை மூலிகை
மரக்கன்றுகள்
நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த நட்சத்திர மரங்கள் பக்தர்களின் வேண்டுதலை நிறுவேற்றும் அட்சயப் பாத்திரமாக மாறி அன்னையின் அருளை வழங்கி எந்தவித தோஷத்தையும் நீக்கிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment