Search This Blog n

02 January 2015

குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேக்கம்:

தாம்பரத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ளதால் அவதிப்பட்டு வருவதாக கூறி அப்பகுதி பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மழைநீருடன் கழிவுநீர் கலப்பு
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி 27–வது வார்டு அருள்நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தாழ்வான பகுதியான இங்கு, மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் கட்டப்படவில்லை. காலி இடங்களாக இருந்தபோது மழைநீர் வெளியேறி வந்தது. தற்போது இப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்து விட்டதால் தண்ணீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதியிலேய தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
கடந்த வாரம் பெய்த மழையில், மழைநீர் வெளியேறாமல் அருள்நகரில் உள்ள 3 தெருக்களில் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தற்போது மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. மேலும் அப்பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று காலை இரும்புலியூர் பழைய ஜி.எஸ்.டி. சாலையில் அருள்நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி அ.தி.மு.க. கவுன்சிலர் ரதிதேவியின் கணவர் சரவணன், நகராட்சி மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி பெண்கள் கூறும்போது, ‘‘மழை பெய்து பல நாட்கள் ஆகியும் மழைநீர் தேங்கி உள்ளதை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீரை வெளியேற்றுங்கள் என்றால், எப்படி வெளியேற்றுவது? என எங்களிடமே நகராட்சி ஊழியர் கேட்கிறார். கால்வாய் கட்டி எதிர்காலத்தில் எங்கள் பகுதியில் சுகாதார பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். இந்த பகுதியில் 100–க்கும் மேற்பட்ட பன்றிகள் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்து நகராட்சியில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment