Search This Blog n

10 January 2015

போட்டியை நடத்த அரசு நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஜல்லிக்கட்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு இறுதியாக கடந்த 7.5.2014 அன்று உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டு மொத்த தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், வரும் பொங்கல் திருநாளை யொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப்பிரிவு, ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு, எனவே அவை தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்து பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவைகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11.7.2011 நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஜனவரி 2012–ல் ராதா ராஜன் மற்றும் பிராணிகள் நல வாரியத்தினர், காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதை தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசால் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கூடுதல் பாதுகாப்புடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது. 10.1.2013ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து இந்த வழக்கை உச்சநீதி மன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது.

7.5.2014 அன்று உச்சநீதி மன்றத்தால், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பித்து ஆணை வழங்கப்பட்டு இது தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதால் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதி மன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து 19.5.2014 அன்று தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனு இன்னமும் நிலுவையில் உள்ளது.

பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதோடு, அது குறித்த பல்வேறு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் கடந்த பல மாதங்களாக எடுத்து வருகின்றனர். மத்திய அரசினை தொடர்பு கொண்டு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையிலிருந்து காளையை நீக்கம் செய்ய தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் புது தில்லியிலுள்ள தமிழக அரசின் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு, தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவினை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

7.1.2015 அன்று தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து, மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அரசிதழில் ‘காளைகளை’ நீக்கும்படி வற்புறுத்தப்பட்டது. மத்திய அரசு அலுவலர்கள் துறை அமைச்சருடன் விவாதித்து அவ்வாறான அறிவிக்கையை வெளியிடுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு ஏதுவாக 1960ஆம் ஆண்டைய இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் பழக்கப்பட்ட விலங்கினை காட்சிப்படுத்துவது என்ற பிரிவிலிருந்து காளைகளை உடனடியாக நீக்கி அறிவிக்கை வெளியிடக் கோரி தமிழக அரசின் உயர் அதிகாரிகள் வரும் 12.1.2015 அன்று மீண்டும் புது தில்லி சென்று மத்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து வற்புறுத்துவார்கள். இந்த அறிவிக்கையை மத்திய அரசு உடன் வெளியிடும் என நான் நம்புகிறேன். அவ்வாறான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு விட்டால், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எந்தவித ஊறும் இல்லாத வகையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒரு புதிய அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட வழிவகை ஏற்படும்.

மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்ட உடனேயே, இதற்கான நடவடிக்கையை உடன் எடுத்து, தமிழர்களின் பராம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை உடன் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment