Search This Blog n

22 January 2015

கொன்று நகை கொள்ளை: வாலிபருக்கு தூக்கு தண்டனை-


நகை வாங்குவது போல் நடித்து நகை கடை உரிமையாளரை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பூராராம் (வயது 65). இவருடைய மகன்கள் கானாராம் (30), குணாராம் என்ற கணேஷ் (28). இவர்கள் கடந்த பல வருடங்களாக மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். 
அதே பகுதியில் உள்ள பட்டேல் சாலையில் இவர்கள் சொந்தமாக நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகின்றனர். கடந்த 14-4-2012 அன்று கடையில் கணேஷ் மட்டும் தனியாக இருந்தார். அண்ணன் கானாராம் வேலை காரணமாக வெளியே சென்று விட்டார். அன்று பிற்பகலில் கல்லூரி மாணவர் போல் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், நகைகள் வாங்க வேண்டும். புதிய மாடல்களை காட்டுங்கள் என்றார். 
தான் கொலை செய்யப்பட உள்ளோம் என்ற உண்மை தெரியாமல் கணேஷ், வந்தவரிடம் கடையில் இருந்த புதிய ரக தங்க நகைகளின் மாடல்களை எடுத்து காட்டினார். அவைகளில் திருப்தி அடையாத அந்த வாலிபர், “இந்த மாடல்கள் எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. வேறு மாடல் இருந்தால் காட்டுங்கள்” என்றார். 
உடனே கணேஷ், வேறு மாடல் நகைகளை எடுத்து வர கடையில் உள்ள லாக்கர் அறைக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த வாலிபர், திடீரென கணேஷின் முதுகில் ஏறி அவரது வாயை பொத்திக்கொண்டார். தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கணேஷின் கழுத்தின் பின் பகுதியில் வெட்டினார். 
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கணேஷ், சத்தம் போடாமல் இருக்க மீண்டும் அவரது வாயை பொத்திக்கொண்டு கத்தியால் அவரது கழுத்தை தரதரவென்று அறுத்தார். பின்னர் 
வயிற்றிலும் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கணேஷ், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். 
பின்னர் அந்த வாலிபர், லாக்கரில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்தார். அவற்றை தான் கொண்டு வந்த பையில் வைத்துக்கொண்டு எதுவும் தெரியாததுபோல் சாவகாசமாக கடையில் இருந்து வெளியேறி சென்று விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் கடையில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. 
சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த கானாராம், கடையில் கணேஷ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை. பின்னர் கடைக்குள் உள்ள லாக்கர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு தனது தம்பி கணேஷ், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அலறினார். 
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளியை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 
இந்த நிலையில் கடந்த 12-5-2012 அன்று 
பள்ளிக்கரனை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், வாலிபர் ஒருவர் “நான் சென்னை மாநகராட்சி ஊழியர். பன்றி காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து விட்டு கணக்கெடுக்கும் பணிக்காக வந்து உள்ளேன்” என்று கூறி அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். 
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கத்தி முனையில் மிரட்டிய வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, நெல்லிக்கடை வீதியை சேர்ந்த ராமஜெயம் (32) என்பதும், மதுரவாயலை அடுத்த நகைக்கடையில் புகுந்து உரிமையாளர் கணேஷை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரிந்தது. ராமஜெயத்தை போலீசார் கைது செய்தனர். 
இலங்கையில் 6 மாதம் தங்கி ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் படிப்பு படித்த ராமஜெயம், 6 மாதம் கனடாவில் தங்கி வேலை செய்து வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற சரியான வேலையும், சம்பளமும் கிடைக்கவில்லை. இதனால் குறுகிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் நகை கடை உரிமையாளர் கணேஷை கொலை செய்து 
கொள்ளையடித்ததாக கூறினார். 
ஆனால் நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளில் பெரும்பாலும் கவரிங் நகைகள் என்பதால் மீண்டும் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது போலீசில் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். 
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, ராமஜெயம் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிரூபிக்கப்பட்டதால் கொலையாளி ராமஜெயத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். 
இந்த வழக்கில் 30 சாட்சியங்கள், 22 ஆவணங்கள், 14 தடயங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அந்தமான்முருகன் ஆஜராகி வாதாடினார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment