Search This Blog n

28 January 2015

சன் டி.வி. அதிகாரி கைது ஆணையத்தில் புகார்

 கைது செய்யப்பட்ட தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் செயலாளர் மற்றும் சன் டி.வி. அதிகாரி சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.
சி.பி.ஐ. கைது
சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி தயாநிதி மாறனின் கூடுதல் தனிச்செயலாளராக இருந்த வி.கவுதமன், தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோர், கடந்த 21–ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரையும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மூவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
இந்த நிலையில் எஸ்.கண்ணன் மனைவி நபிசா மற்றும் வி.கவுதமன் மனைவி மணிமேகலை ஆகியோர் தரப்பில் நேற்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் தனித் தனியாக புகார் மனு அளிக்கப்பட்டது.
எஸ்.கண்ணன் சார்பாக அவருடைய மனைவி நபிசா அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
ஒத்துழைப்பு அளித்தார்
தற்போது சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள எனது கணவர் கண்ணனை எந்த வித முகாந்திரமும் இன்றி முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறனுக்கு எதிரான விசாரணையில் சாட்சியம் அளிக்க சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
அவர்கள் அழைத்த போதெல்லாம் எனது கணவர் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்தார். இந்த விசாரணைகளின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக சாட்சியம் அளிக்குமாறு, அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாக எனது கணவர் பலமுறை என்னிடம் கூறியுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் பலமுறை அழைத்து கடுமையான மன உளைச்சலுக்கு அவரை ஆளாக்கி இருக்கிறார்கள்.
மனித உரிமை மீறல்
எனது கணவருக்கு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது. அவருக்கு அளிக்கப்படும் மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் மிகவும் அச்சம் அளிக்கிறது. அவருக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை அவர் தாங்குவாரா என்பது தெரியவில்லை.
அவருடைய உடல்நிலை பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் இப்படி அவரை கைது செய்து துன்புறுத்துவது மனித உரிமை மீறலாகும். இதனால் அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும் என்றும் அச்சப்படுகிறேன். எனவே மனித உரிமை ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நேரில் தாக்கல்
வி.கவுதமன் மனைவி மணிமேகலை அளித்துள்ள புகாரிலும் மருத்துவ ரீதியான பிரச்சினை தவிர ஏறத்தாழ இதேபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன.
மேற்கண்ட இருவரின் புகார் மனுக்களையும் அவர்களின் சார்பில் வக்கீல் ஜெகதீஸ்வரன் நேற்று டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்தார்.
சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி மறுப்பு
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும், 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. அதிகாரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி விசாரித்து நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை (இன்று) பிறப்பிக்கிறார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment