Search This Blog n

28 January 2015

ஜோடிக்கப்பட்டது ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை நிறைவு செய்தார்

 சொத்து குவிப்பு வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பு மூத்த வக்கீல் குமார் இறுதி வாதத்தில் எடுத்துரைத்தார். இத்துடன் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் வாதம் நிறைவடைந்தது.
மேல்முறையீட்டு மனு 
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தண்டனை வழங்கி பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த 5–ந்தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது.
முதல் 5 நாட்கள் ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் குமார் ஆஜராகி வாதிட்டார். அதன் பிறகு ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் தொடர்ந்து 8 நாட்கள் ஆஜராகி பல்வேறு முக்கியமான விஷயங்களை எடுத்து வைத்து வாதிட்டார். ஜெயலலிதாவுக்கு வந்த வருமானங்கள் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 23–ந்தேதியுடன் தனது வாதத்தை நிறைவு செய்தார். அத்துடன் ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்ததாக கூறப்பட்டது.
நீதிபதி அனுமதி வழங்கினார் 
இந்த நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் 14–வது நாள் விசாரணை நேற்று மீண்டும் தொடங்கியபோது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் குமார், நிறுவனங்கள் சம்பந்தமாக சில அம்சங்கள் விடுபட்டு இருப்பதாகவும், அதை கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுவர அவகாசம் தருமாறும் கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமாரசாமி தொடர்ந்து வாதிட அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து குமார் வாதிட்டபோது நமது எம்.ஜி.ஆர். நிறுவனத்துக்கு வந்த வருமானம், திராட்சை தோட்டத்தில் கிடைத்த வருமானம் மற்றும் வருமான வரித்துறை கூறிய கருத்துக்களை எடுத்து வைத்தார்.
மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம் 
அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி, ‘‘நீங்கள் சொல்லும் இந்த விவரங்களை வக்கீல் நாகேஸ்வரராவ் விரிவாக எடுத்து வைத்து வாதிட்டுவிட்டார். இதுவரை இங்கு சொல்லப்படாத விஷயங்கள் இருந்தால் அதை எடுத்து சொல்லுங்கள். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம்’’ என்றார்.
அதைத்தொடர்ந்து குமார் தனது வாதத்தை தொடர்ந்தார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:
ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய 2 நிறுவனங்களில் மட்டுமே ஜெயலலிதா பங்குதாரராக இருக்கிறார். மற்ற நிறுவனங்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த நிறுவனங்களில் ஜெயலலிதா முதலீடு எதுவும் செய்யவில்லை. ஜெயலலிதா வீட்டில் சசிகலாவும், இளவரசியும் தங்கி இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக ஊழல் தடுப்பு போலீசார் இதை மாற்றி மற்ற நிறுவனங்களிலும் ஜெயலலிதாவுக்கு பங்கு இருப்பதாகவும், அவர் முதலீடு செய்து இருப்பதாகவும் கூறி சொத்து குவிப்பு வழக்கை ஜோடித்துவிட்டனர்.
விடுதலை செய்ய வேண்டும் 
இது முற்றிலும் தவறானது. ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு வந்த மாத வாடகை மற்றும் முன்பணம், காலி நிலத்துக்கு வந்த வாடகை ஆகியவற்றை ஊழல் தடுப்புத்துறை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதில் கிடைத்த வருமானத்தை சொத்து குவிப்பு வழக்கில் சேர்த்துவிட்டனர். இது தவறானது.இதை நாங்கள் எடுத்துக் கூறியும் கீழ்கோர்ட்டு இதை ஏற்கவில்லை. இதை ஏற்று இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும்.’’இவ்வாறு வக்கீல் குமார் வாதிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment